காசா பல்கலைக்கழகத்தை தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கும் அமெரிக்கா

106989818 காசா பல்கலைக்கழகத்தை தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கும் அமெரிக்காகாசா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தகர்த்ததுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது அமெரிக்கா.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,140 பேரும், காசாவில் 24,620 பேரும் உயிரிழந்தனர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்வதால், காசாவில் வசித்த 85 சதவீத மக்கள், அதாவது 24 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. பலர் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு அவசர உதவி தேவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல், வான் வழி தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அல்-அமல் மருத்துவமனை அருகே நடைபெற்ற தாக்குதலில் ஒரே இரவில் 77 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழக வளாகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. கட்டிடத்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறுவதுபோல் அந்த வீடியோ காட்சி உள்ளது. ஆட்கள் இல்லாத இந்தகட்டிடத்தை தகர்த்தது குறித்து இஸ்ரேலிடம் அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது. காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும்வெடி பொருட்களை அமெரிக்கா வழங்கியது. அதனால் கைவிடப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தை தகர்த்தது ஏன் என அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.