அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயினால் ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரியும் இந்த தீயை அணைக்க முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
மேலும் இந்தக் காட்டுத் தீயினால், இதுவரை 85 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் 3 இலட்சம் ஏக்கர் வரையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைப்பதற்கு 7ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்தக் காட்டுத் தீயினால் குடியிருப்புகள் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளதால், மேலும் 125 தீயணைப்பு வாகனங்களும், 1000 வீரர்களும் தேவையாக உள்ளதாக வேறு மாகாணங்களிடம் கலிபோர்னியா உதவி கோரியுள்ளது.
இதுவரை தீயில் 50 வீடுகள் எரிந்துள்ளன. 2000 வீடுகள் தீயில் சிக்கும் நிலையில் உள்ளன. அத்துடன் 1இலட்சம் பேர் வசிக்கும் வாகவில்லே என்ற பகுதியை காட்டுத் தீ சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சண்டாகுருஸ், சான்மாடியோ பகுதிகளில் இருந்து சுமார் 22ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 3 நாட்களுக்குள் 11ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டு தீ மேலும் பரவி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.