கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும், கொழும்பு கடல் எல்லைக்குள் தீப்பிடித்து விபத்துக்குள்ளான எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடல் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. கப்பலில் இரசாயன திரவங்கள், எண்ணெய் உள்ளிட்ட கடலுக்கு ஏற்பில்லாத பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கப் போகின்றது. மீன்பிடிதுறைக்கும் இது பெரும் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் வழமையான செயல்பாடுகள் இடம்பெறவில்லை. இதனால், உண்மையான தாக்கம் என்னவென்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, கப்பலில் இருந்து கடலுக்குள் பரவியுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் இந்து சமுத்திரம் முழுவதும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறுவதாயின் சோமாலியா தொடக்கம் இந்தோனேசியா வரையிலும், இதே போன்று இந்தியா தொடக்கம் மாலைதீவு வரையிலும் இந்து சமுத்திரம் முழுவதும் இந்த பிளாஸ்ரிக் துண்டுகள் பரவியுள்ளன.

இதன் பாதிப்பை சாதாரணமாகக் கணக்கிட முடியாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் பாதிப்பு வெளிப்படும். இந்தத் தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் – என்றார்.

Leave a Reply