கனத்த மனதுடன் நடேசன் அவர்களை நினைவுகூருகிறோம்-மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

172 Views

படுகொலைசெய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் , நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16வது நினைவுதினம் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நினைவுகூரப்பட்டது .

இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் மட்டு.ஊடக அமையத்தில் இந்த நினைவு தினம் நினைவுகூரப்பட்டது .

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16வது நினைவுதினத்தை குறிக்கும் வகையில் 16 ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டது. இரண்டு நிமிடம் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து இலங்கை படையினருடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக, நேரடியான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு,கொலையாளிகள் இனங்காட்டப்பட்ட நிலையிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.

இதேவேளை போர்க்காலத்தில், இலங்கை படையினரின் ஒத்துழைப்புடன், பல தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் எந்த தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கையொன்றினை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் படுகொலைகளும் அதிகரித்தபோது அதற்கு எதிராகவும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பல தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் படையினர் அதிகமான பிரசன்னமான பகுதிகளிலும் வைத்து பல தமிழ் ஊடகவியலாளர்கள் வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையினையும் உரியமுறையில் மேற்கொள்ளாது காலத்திற்கு காலம் வரும் அரசுகள் அவற்றினை கிடப்பில் போட்டுவருவதுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான் தொடர் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுவருகின்றது.

இதேபோன்றே 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி எல்லை வீதியில் தனது அலுவலகத்திற்கு கடமைக்கு சென்றுகொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஜ.நடேசன் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இருந்த அப்பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிலரின் பெயர்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவும் இல்லை,அது தொடர்பில் விசாரணைசெய்யப்படவுமில்லை.

தமிழ் மக்களின் குரல் வளையினை நசுக்கும் செயற்பாடாவே தமிழ் மக்களும் தமிழ் ஊடகத்துறையும் அதனை நோக்கியது.

இதுவரையில் இலங்கையில் கொல்லப்பட்ட எந்த தமிழ் ஊடவியலாளர்களின் கொலை குறித்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.இன்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் எந்தவித அழுத்தங்களையும் வழங்கியதாக இதுவரையில் தெரியவில்லை.

இவ்வாறான நிலையிலேயே அமரர் நாட்டுப்பற்றானர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசனின் 16வது ஆண்டு நினைவினை எமது சங்கம் கனதியான மனதுடன் நினைவுகூருகிறது.

Leave a Reply