இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்காக விசேட சரத்துஒன்றை பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்படலாம் என இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மத்தியில் காணப்படும் சந்தேகத்தை போக்குவதற்காக மிகவும் விருப்பத்திற்குரிய கடன்வழங்குநர் என்ற சட்டக்கூறினை உருவாக்குவது குறித்து இலங்கை ஆராய்ந்து வருகின்றது இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்தவர்களை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன்வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது தாமதமாகின்ற நிலையிலேயே இலங்கை புதிய திட்டம் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
மிகவும் விரும்பத்தக்க கடன் வழங்குநர் என்ற பதம் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர் இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அனைத்து கடன்வழங்குநர்களிற்கும் அதே விதிமுறைகள் நீடிக்கப்படுவதை உறுதி செய்யும் என புளும்பேர்க் தெரிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் ஏற்கனவே இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை பெறுவதற்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளின் இணக்கப்பாடு அவசியம்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை பெறுவது சர்வதேச நிதியமைப்புகளின் நிதி இலங்கைக்கு கிடைப்பதை உறுதி செய்யும்.
இலங்கை அரசாங்கம் டிசம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் என எதிர்பார்த்தது எனினும் அது சாத்தியமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.