கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும்- தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்தும்   300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, அவர்களில் 54 மீனவர்களை  கச்சத்தீவு அருகே  இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில்  வைத்து கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

“இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 54 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளைச் சார்ந்த 54 மீனவர்களை நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் அனைவரும் இப்பொழுது 3 தீவுகளில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களைக் கைது செய்வதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் இலங்கைக் கடற்படைக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. இதைப் பற்றி இந்திய அரசு பாராமுகமாக இருப்பதாலும், தமிழக அரசும் இது தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் மத்திய அரசுக்குக் கொடுக்காமல் அலட்சியம் செய்வதாலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவருகிறது.

இலங்கையில் இருக்கும் மேற்கு சரக்கு முனையத்தை (Western Cotainer Terminal ) அதானி குழுமத்துக்குப் பெற்றுத் தருவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரையும், இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மோடி அரசு தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்படும்போதும், அவர்கள் கைது செய்யப்படும்போதும் அத்தகைய அக்கறையைக் காட்டுவதில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குத் தமிழக மீனவர்களின் உயிரைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை. அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டுள்ள அதிமுகவும் இதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறது.

சில நாட்களுக்குமுன் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் மோடி அரசு இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவு அளித்ததையும், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்ததையும் பார்க்கும்போது இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறதா? தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். தேசபக்தி பற்றி வாய்வலிக்கப் பேசும் பாஜகவினர் இன்றைக்கு மிகப் பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சியில் இருக்கும் நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? இந்திய இறையாண்மை மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் உடனடியாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதன்மூலமே தமிழக மீனவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.