ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே -மாரீசன்

606 Views

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே

இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே

மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே

தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி

மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே

பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு

ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி

சாவொன்றும் களம்புகுந்து  கசடர்களை மடக்கி

ககனத்தி லுலவிவரும் தியாகிகளைப் பாடேன்

மலையிலிருந் தூற்றெடுத்துப் பாய்கின்ற புனலே

நிலையெடுத்துப் பகைசரித்த மறவர்களைப் பாடு

அலையலையாய்த் தொடர்ந்துவந்த சிங்கங்களை வீழ்த்தி

அகிலத்தை அதிரவைத்தமா வீரர்களைப் பாடேன்

வான்மீது திரண்டொன்றாய் அசைந்தாடும் முகிலே

வளம்பெருக்கிக் களமாடிச் சாதனைகள் படைத்து

கானூடு ஊடுருவி யூர்ந்துவந்த பகையை

இருளூடு சிதறடித்தமா வீரர்களைப் பாடேன்

காரிறுக்கச் சூல்முற்றிப் பெய்கின்ற மழையே

கடல்மீது நடமாடிக் கொடுமைகளைப் புரிந்த

கடற்படையின் கப்பல்களைக் கடலுள் மூழ்கடித்து

நீரோடு நீரானகடற் கன்னியரைப் பாடேன்

சோலையினி லெழில்பரப்பும் நறுமணத்தின் மலரே

சொந்தபந்தப் பற்றறுத்து சிங்களமும் திகைக்க

முந்திமுதற் கரும்புலியாய்த் தலைவன்கரம் பற்றி

நெல்லியடி முகாம்தகர்த்த மில்லர்புகழ் பாடேன்

கீழ்வானி லெழுந்துலகின் இருளகற்றும் நிலவே

வீசுமொளி வீச்சினிலே தலைவன்புகழ் பாடு

தாழ்ந்துநின்ற தமிழினத்தை தலைநிமிர்த்தி வாழவைத்து

வீங்குபுகழ் சேர்த்தவந்தத் தேவன்புகழ் பாடு

கொண்டலெனக் கருக்கூட்டி அண்டமெலா மதிரவைத்து

கோரமுகத் தோடுதலை விரித்தாடும் புயலே

மண்டலங்க ளதிரவைத்து அதிரடியால் இனமழித்த

சண்டியரைச் சரித்தமா வீரர்களைப் பாடேன்

பகலிரவைப் பகுத்துவைக்கப் பம்பரமாய் சுழன்றுநின்று

பகலவனில் நிழலுமிட்டு உருமறைக்கும் பூப்பந்தே

பெருமெடுப்பில் குண்டுகளால் இனமழித்த விமானங்களை

எரிமலையாய்ப் பொசுங்கவைத்த கரும்புலிகள்புகழ் பாடேன்

பூவிலுறை யுயிரினங்கள் அத்தனைக்கும் வாழ்வளித்து

ஆவியுயிர்ப் பாகிநிற்கும் எரிதழற் செங்கதிரே

தேவனெனத் தமிழீழம் படைத்ததனை யாண்டுநின்ற

மாமன்னன் தேசியத் தலைவன்புகழ் பாடேன்.

Leave a Reply