ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் ஆரம்பம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது.

ஜப்பான் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோரியோ சசாகி ஒலிம்பிக் தீபத்தை முதலில் ஏந்தி ஒலிம்பிக் தீப ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார். இவர் 2011-ஆம் ஆண்டு ஜப்பான் பெண்கள் கால்பந்து அணி உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தவராவார்.

இவருடன், இன்று முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓட்டத்தை ஆரம்பித்தனர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களில் மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது.

இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிற்போடப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பூசி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்தே டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 23-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.