ஒற்றையாட்சியை நிராகரிப்பது எமது கட்சி மட்டுமே(நேர்காணல்) -செல்வராஜா கஜேந்திரன்

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் திரு. செல்வராஜா கஜேந்திரன் எமக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல்.

கேள்வி: இந்தக் காலகட்டத்தில் உங்கள் கட்சியின் வளர்ச்சி பற்றி கூறவும்?

பதில்: கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டது. அதற்கான பிரதான காரணம், தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 1976ஆம் ஆண்டு இடம்பெற்ற போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வாக வடகிழக்கு இணைந்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம், தமிழ் தேசம், அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஸ்டித் தீர்வை ஏற்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபபட்டது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை 2009ஆம் ஆண்டு யூன் மாத்திற்கு பிற்பாடு கைவிட்ட நிலையில், அந்தக் கொள்கைகளை கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக எமது கட்சி உருவாக்கப்பட்டது.

ஆனால் எமது கட்சியை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கமும், ஏனைய தமிழர் தரப்பு கட்சிகளும், ஒருசில ஊடகங்களும், சில சர்வதேச சக்திகளும் முன்னின்று எங்களைப் பற்றிய உண்மைகளை மறைத்து அப்பட்டமான பொய்களைப் பரப்பி எங்களை அழிப்பதற்கு முயற்சி செய்திருந்தார்கள்.

அதன் காரணமாக நாங்கள் 2010, 2015ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறமுடியாதிருந்தது. இருந்தும் எங்களின் பயணமானது ஒரு பதவியைப் பெறுவதற்கான பயணமாக இல்லாது, அரசியல் விடுதலையை நோக்கிய பயணமாக இருந்ததால், நாங்கள் அந்தத் தோல்வியைத் தாண்டியும் எமது மக்களின் அரசியல் விடுதலைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலே தெடர்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

தேர்தல் தோல்விகளைப் பொருட்படுத்தாது பயணிப்பதற்கு , அரசியலை நாங்கள் முன்கொண்டு செல்வதற்கு கஜேந்திரகுமார் அவர்களின் ஊக்கமும் வழிகாட்டலும் மிகப் பெரிதாக இருந்தது.அந்தப் பயணத்திலே 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலிலே கணிசமானளவு முன்னேற்றத்தையும் எழுச்சியையும் நாம் கண்டிருந்தோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு, தமிழர் தாயகப் பிரதேசத்தில் நாங்கள் தமிழ்த் தேசியத்தில் முதலாவதாகவும், தேர்தலில் வாக்குகளைப் பெற்ற இரண்டாவது பெரிய கட்சியாகவும் இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு மிகப் பெரிய வளர்ச்சி. இப்போது முன்பிருந்ததைவிட மக்களின் ஆதரவு எமக்கு மிகப் பெருமளவில் அதிகரித்திருக்கின்றது. எதிர்வரும் தேர்தலிலே அந்த மாற்றங்களை மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது உங்கள் கட்சியின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

பதில்: எங்களுக்கு என்றொரு இலட்சியம் இருக்கின்றது. அந்த இலட்சியத்தை அடையும் வரை அதற்கான பாதையில் நாங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றோம். அந்த பாதையில் தேர்தல்கள் வருகின்ற போது தவிர்க்க முடியாமல் நாங்களும் அந்த தேர்தல்களில் போட்டியிட வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அந்த வகையில் வரப்போகும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடும்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர வேண்டும் என்ற விவாதம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

பதில்: என்னைப் பொறுத்த வரையில் இந்த விவாதங்களுக்கு நாங்கள் கடந்த காலங்களில் பதிலளித்து முடித்து விட்டோம். எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை ஒன்றே எங்களின் குறிக்கோள். அந்த அரசியல் விடுதலை என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தினுடைய அங்கீகாரத்தை வலியுறுத்தி அந்த அங்கீகாரம் பெறப்படுவதிலே தான் அரசியல் விடுதலை என்பது இருக்கின்றது.

அந்த வகையிலே கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சமஸ்டித் தீர்வு வேண்டும் என்ற தீர்வில் உறுதியாக இருக்கின்ற ஒரேயொரு அரசியல் கட்சியாக எமது கட்சியே இருக்கின்றது. ஆகவே இந்த நிலைப்பாட்டோடு நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். ஏனைய தரப்புகளைப் பற்றி நான் இந்த இடத்தில் எதையும் கூற விரும்பவில்லை.

கேள்வி: காணாமல் போனோரின் உறவுகளின் போராட்டங்களில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது?

பதில்: எங்களைப் பொறுத்த வரையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான முழுப் பொறுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தையே சாரும். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணால் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடுவதற்கான உந்துதலை ஏற்படுத்தியதில் எங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. தாயகத்தில் இந்த மக்களுடன் அடிமட்டத்தில் நாங்கள் பக்கபலமாக நிற்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நாங்கள் இருக்கின்றோம். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமையகத்திற்குச் சென்று அங்கே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும். அதுவும் ஒரு சர்வதேச விசாரணை ஊடாகவே அடையப்பட முடியும் என்பதை வலியுறுத்தும் ஒரேயொரு அரசியல் கட்சியாக நாங்களே இருக்கின்றோம்.

குறிப்பாக வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களும் இந்தக் கருத்தை முன்வைப்பது கிடையாது. எங்கள் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செயலாளரான நான், மற்றும் சட்டத்தரணி மணிவண்ணன் போன்றவர்கள் தான் கடந்த காலத்தில் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளோம்.
எங்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும்கூட அவற்றைத் தாண்டி நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். எதிர்காலத்திலும் நாங்கள் அந்த நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால், தாயகத்தில் இன்று தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நல்லாட்சி என்று சொல்லப்பட்ட மைத்திரியின் அரசாக இருக்கலாம் அல்லது தற்போது வந்துள்ள கோத்தபயா அரசாங்கமாக இருக்கலாம் யாராக இருந்தாலும் தமிழ் தேசத்ததை அழிப்பதில் எந்தவித கொள்கை மாறுபாடுகளும் இல்லாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

தற்போது பாராளுமன்றத்தில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விஜயகலா, அங்கஜன் போன்றவர்கள் இந்த செயற்பாடுகளுக்கு பரிபூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அவர்களின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா தரப்பு கட்சியும் அந்த செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. ஆகவே இந்த நிலை நீடிக்க இடமளிக்கக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

ஆகவே எதிர்காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்தை பலப்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும். அவர்களிடமிருந்து மூன்று விதமான உதவிகளை எதிர்பார்க்கின்றோம். முதலாவது தாயகத்தில் இருக்கும் தங்கள் உறவுகளுடன் தொடர்பு கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணியைப் பலப்படுத்த வேண்டும் என்று ஒரு கருத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

இரண்டாவது தாயகத்தில் தமிழ்த் தேசிய முன்னணியை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்துவதற்கும் கொள்கை ரீதியாக முன்னெடுப்பதற்கும் வேண்டிய உதவிகளை அந்த மக்கள் வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
மூன்றாவது தேர்தல் என்று வரும் போது புலம்பெயர் மக்கள் தாயகத்திற்கு வந்து எங்களைப் பலப்படுத்தக்கூடிய வகையில் அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ என்கின்ற அதிதீவிர பௌத்த இனவாத சிந்தனையுடையவரை வெல்ல வைப்பதற்காக உலகெங்கும் வாழும் பௌத்த பேரினவாத சிந்தனையுடைய இலட்சக் கணக்கான சிங்கள மக்கள் இலங்கைக்குத் திரும்பி அவருக்காக வாக்களித்துள்ளனர்.

அவர்கள் ஒரு இனவாத செயலைப் புரிந்திருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்த வரையில் எங்களின் அணுகுமுறை என்பது ஒரு இனவாத அடிப்படையிலானது அல்ல. நாங்கள் வடகிழக்கில் இருக்கக்கூடிய சிங்கள, முஸ்லிம் மக்களை அனுசரித்து அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே எங்களின் தரப்பு வெல்லுகின்ற போது தான் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இந்த அணியைப் பலப்படுத்துவதற்கு தேர்தல் காலங்களில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தேசங்களிலுள்ளவர்கள், இலங்கையில் வாக்குரிமை உள்ளவர்கள் நிச்சயமாக இங்கு வந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.