இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விடயத்தில், தென் பகுதிக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முக்கியமான விடையங்களில் கையாளுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புக்கள் இலங்கையில் ஒரு நாடு இரு சட்டம் என்பதையா காட்டுகிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தமிழர்களின் சனநாயக உரிமைகளை சட்டத்தின் இரும்புக் கரத்தினால் அடக்குவதாகவே உள்ளது. மிகவும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல். இலங்கைத் தீவிற்கு உரித்துடைய சிறிய எண்ணிக்கையான தேசிய இனத்தை பெரும்பான்மை தேசிய இனம், இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசு என்ற அரசியலமைப்பை வைத்து சட்டத்தின் மூலம் நசுக்குதல் மிக மோசமான அடிப்படை உரிமை மீறல்.
தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து, கிளர்ச்சியை மேற்கொண்ட ஐே.வி.பி ரோகண வீஜேவீர உள்ளிட்டவர்களை நினைவுகூர முடியுமென்றால், யுத்தத்தில் இறந்த இராணுவத்தினரை யுத்த வெற்றியில் நினைவுகூர முடியுமென்றால், ஏன் தமிழர்கள் முப்பதாண்டுப் போரில் இறந்த தங்களது உறவினர்களை, பிள்ளைகளை, பெற்றோர்களை, நண்பர்களை நினைவுகூர முடியாது?
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் இறந்தவர்களை நினைவுகூர எந்த தடைகளும் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழும் வடகிழக்கு தமிழர்கள் தங்களது இறந்த உறவுகளைக்கூட நினைவுகூர உரிமை இல்லையென்றால், அவர்கள் எதிர்பார்க்கும், மறுக்கப்பட்ட உரிமை கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்புக்கள் வெளிப்படுத்துகின்றன என்றார்.