ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்ட தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், சிறீலங்காவில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு சிறீலங்கா அரசை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

சிறீலங்காவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டரில்   “ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து  தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.