ஐ.நா.வினால் என் மீது விசாரணை நடத்த முடியாது! மஹிந்த மன்னிப்பு தந்துவிட்டார் ; கருணா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், தன்மீது விசாரணை நடத்த முடியாது என்று கூறிய கருணா அம்மான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனக்குப் பொதுமன்னிப்பு வழங்கியமை அனைவருக்கும் தெரியும் என்றும் தனக்கு மாத்திரமல்லாது, 13 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு அவர் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கியிருந்ததாகவும், அத்துடன் இந்த விடயம் முடிந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே கருணா இவ்வாறு கூறினார்.

சிலருக்குப் பிரச்சினைகள் தேவைப்படுவதாகத் தெரிவித்த கருணா, இந்தப் பிரச்சினையை அரசியல் இலாபங்களுக்காக சஜித் பிரேமதாஸதான் ஆரம்பித்துள்ளார் என்றும் குறிப்பிட்டதோடு அவருடை தந்தையான ரணசிங்க பிரேமதாச, புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் 5 ஆயிரம் ரைபில்கள், பணம் மற்றும் 5 ஆயிரம் கிரேணைட்டுகளை வழங்கியதாகவும் கூறினார்.

அத்துடன், அந்த ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதுடன், டி-56 ரக ரைபில் போன்ற சிறந்ரைபில்களை, பிரேமதாஸ வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், என்றுமே தான் பிரதமர் மஹிந்தவின் பக்கம்தான் இருப்பதாகக் கூறியுள்ள கருணா, எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் அங்கத்துவம் வகிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.