ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலி உலங்குவானூர்தி சேதம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் இராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான் படைத் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3ஆம் திகதி பக்தாத் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க இராணுவம் அளில்லா விமான ஏவுகணை வீச்சில் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உட்பட 8பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தருவோம். பழிக்குப்பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்திருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஈராக் நாடாளுமன்றமும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் ஈராக்கில் ஏராளமான செலவில் கட்டுமானங்கள் செய்திருப்பதால், அவற்றிற்கான இழப்பீடு தந்தால்தான் வெளியேற முடியும் என அமெரிக்கா தெரிவித்தது.

இந்த சூழலில் ஈராக் பக்தாத் அருகே இருக்கும் அன் அல் ஆசாத் மற்றும் ஹாரிர் காம்ப் ஆகிய விமானத் தளங்களைக் குறிவைத்து ஈரானின் இராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

தரையிலிருந்து வான் மற்றும் தரை இலக்கை துல்லியமாகத் தாக்கும் ஃபட்டா 313 ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவப்படை இன்று அதிகாலை அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 10இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கெர்மான்ஷா மாநிலத்திலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் எப்படியான சேதங்கள் ஏற்பட்டது என்ற விபரங்கள் அமெரிக்கத் தரப்பினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்து ருவிற்றரில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ஓல் இஸ் வெல்“ ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரு இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட சேதாரங்கள், உயிர்ச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்.iRAN2 ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலி உலங்குவானூர்தி சேதம்

உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த, திறமையான இராணுவத்தை நாங்கள் வைத்திருக்கின்றோம். என்னுடைய விரிவான அறிக்கையைப் புதன்கிழமை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கத் தீவிரவாதிகள் 80பேர் கொல்லப்பட்டனர். எந்தவிதமான ஏவுகணையையும் இடைமறித்துத் தாக்கவில்லை.

அமெரிக்கா இந்தத் தாக்குதலிற்கு எதிர் தாக்குதல் நடத்தினால், 100 இடங்களில் ஈரான் இராணுவ தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதலில் அமெரிக்க உலங்கு வானூர்திகள், இராணுவத் தளபாடங்கள் பெரும் சேதமடைந்தன என்று தெரிவித்துள்ளது.