ஏழு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி கருத்துக் கூறிய இந்தியப் பிரபலங்கள், அரசியல்வாதிகள்

605 Views

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைதாகி தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை துரிதப்படுத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தில் இந்திய பிரபலங்கள், அரசியல்வாதிகள்  பலர் அறிக்கைகள் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தனது அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்பட எழுவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.

பின்னர், பல்வேறு சட்டச் சிக்கல்களைத் தாண்டி, இன்றைய அதிமுக ஆட்சி, அந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும். பேரறிவாளனால் தனியே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்து, ஏன் தேவையற்ற காலதாமதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து, மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்க வேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும். அதை மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியது அதைவிடத் தேவையான அவசரக் கடமையாகும்.”  என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கையில்,

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பரில் கூடி பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் மீது இரண்டாண்டு காலமாக முடிவெடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அரசியல் கட்சிகள், அமைப்புகள் எனத் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாணையில் ஆளுநரின் காலதாமதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இருக்கிறது. எனினும், அதனைப் பயன்படுத்த விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்கின்றன என்ற விவரத்தை ஆளுநருக்கு எடுத்துக் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மத்தியப் புலனாய்வுத்துறை, பெருமளவு சதிச் செயல் என்பதால் விசாரணை தொடர்கிறது என்பது போன்ற காரணங்களைத் தெரிவித்து தாமதப்படுத்தும் அலட்சிய மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தமிழர் பேரியக்கச் செயலாளர் கி.வெங்கட்ராமன், பாமக நிறுவர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் 7 தமிழர்கள் விடுதலையை ஆளுநர் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி  வேதாரண்யத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருத்துக் கூறுகையில், “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்துத் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வந்தார். பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் நேற்று இதுபற்றிக் கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றக் கருத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர், அரசு சார்பில் அமைச்சர்களை ஆளுநரிடம் அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 29 ஆண்டுகள் அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்கூட அவர்களை மன்னித்ததுடன் பழிவாங்கும் எண்ணமில்லை என்றும் கூறிவிட்டனர்.

எனவே ஆளுநர் இனியும் அவர்களின் விடுதலையைத் தாமதிக்கக் கூடாது. ஆளுநர் இதை அலட்சியப்படுத்தினால், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம். அதுபோல் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை வருடத்தை நிர்ணயம் செய்து, அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.” என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

Leave a Reply