எழுவர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

464 Views

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர்  மு.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கை இருந்துவருகிறது. ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியுள்ளதையும், ‘அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும், சுட்டிக்காட்டி 19.5.2021 (நேற்று) குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்ச நீதிமன்றமே கரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் அளித்துள்ளார்”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply