எழுவர் விடுதலையில் ஆளுநர் கள்ள மௌனம் – சீமான் கண்டனம்

502 Views

”எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்த பிறகும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தியினைத் தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களும், எல்லாத்தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்துக் குரலெழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்குப் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய்ச் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.

பேரறிவாளன் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றமே அவரின் 161 மனு நிலுவையில் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், அவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவது தமிழக அரசின் முழு முதற் கடமையாகும்.  ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது தம்பி பேரறிவாளனையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply