எழுச்சிகள் தொடரப்பட்டாலே வீழ்ச்சிகள் வளர்ச்சிகளாகும்

ஒவ்வொரு ஆண்டும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தினம் வருகின்ற பொழுது உலகெங்கும் அந்நாளை ஈழத்தமிழர்கள் சிறிலங்காப் படைகளால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தினமாகக் கருதும் பழக்கம் பெரு வழக்காகி வருகிறது.

மனச்சாட்சி உள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள், உலக அமைதி, உலகின் பாதுகாப்பு என்பவற்றில் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் திறனாய்வாளர்கள்,ஆன்மிகத் தலைவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் பல்வேறு ஆளுமைகளில் உள்ள பலராலும் மே18 தமிழின அழிப்பு குறித்து வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவர்களை தாக்கி எழுதுவதாலும் இவர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த எதிர்ப்பலைகளை வேகப்படுத்துவதாலும் உலகின் மனச்சாட்சியின் குரலை அடக்கும் தனது அனைத்துலக செயற்திட்டத்தை சிறிலங்கா எத்தனையோ வழிகளில் முன்னெடுத்து வருகிறது.

இந்த வகையில் தான் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்புக்குரிய முனைவர் ஹக் மெக்டெர் மோட்(Rt.Hon. Dr. Hugh McDermott M.P.)  அவர்கள் மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத்தினத்தையொட்டி விடுத்த அறிக்கையில் சிறிலங்காவின் அந்த ஈழத்தமிழின அழிப்பினை வன்மையாகக் கண்டித்தமை கண்டு அவருக்கெதிரான சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு அலை ஒன்றை உருவாக்கினர்.

இதனைக் கண்டு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினப் புலம்பெயர் சமுதாயத்தினர் குறிப்பாக இளையவர்கள் விரைந்து வெகுண்டெழுந்து மெய்நிகர் வழியில் அவருக்கு ஆதரவைத் திரண்ட முயன்ற பொழுது எதிர்பார்த்ததை விடப் பல்லாயிரம் அதிகமாக ஆதரவுப் பேரலை எழுந்தது. இதனால் மகிழ்வடைந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்புக்குரிய முனைவர் ஹக் மெக்டெர் மோட் அவர்கள் மேலும் தெளிவாகவும் உறுதியாகவும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பின் கொடுமைத்தனம் குறித்து உலகுக்கு மீளவும் எடுத்துரைத்துள்ளார்.

அவரைப்போலவே ஈழத்தமிழர்கள் இனஅழிப்புச் செய்யப்பட்டமை குறித்துக் குரல் எழுப்பியவர்களுக்குச் சிறிலங்கா பல்வேறு தொல்லைகளை விளைவித்த சூழ்நிலையில் அவற்றையே தங்களுக்கான ஊக்க சத்தியாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல பிரித்தானியா உட்பட கனடா ஈறாக ஈழத்தமிழர் குடிமக்களாக வாழும் நாடுகளில் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமைகளுக்காகவும் அமைதிக்காகவும் பாடுபடும் பலரும் சிறிலங்காவின் மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தினம் உலகின் இனஅழிப்பு நாளாகவே வரலாற்றில் பதிவாகிவிட்டதென்பதை விளக்கிப் பேசவும் அறிக்கை விடுக்கவும் செய்தனர்.

இந்த உலகின் மே18 தமிழின அழிப்புத் தினம் தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தக் கூடிய முறையில்,கனடாவில் ‘தமிழின அழிப்பு கல்வி வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே18 இறுதி நாளாக அமையக் கூடிய வகையில் கொண்டாடப்பட வேண்டும் என்னும் 104ம் இலக்க மசோதா அமைந்துள்ளது.

இம்மசோதா ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் அடிப்படையில் 40000முதல் 75000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் மற்றைய மதிப்பீடுகள் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் மே18க்கு முன்னதான பல தசாப்பதங்களாக சிறிலங்கா செய்த பல்வேறு ஈழத்தமிழின அழிப்புகளையும் கவனத்தில் எடுத்தாலே ஈழத்தமிழின அழிப்புக் குறித்த முழுமையை உணரலாம் எனவும் எடுத்துரைத்துள்ளது. இவை உலகின் மிகமோசமான இனஅழிப்புத் தினங்களில் ஒன்றாக சிறிலங்காவின் மே18 தமிழின அழிப்பை வரலாறு முன் எடுக்கும் என்பதை மேலும் உறுதி செய்கிறது.

இத்தகைய ஈழத்தமிழர் உரிமைகள் குறித்த எழுச்சிகள் உலகில் ஏற்படும் பொழுது அவற்றைக் கண்டு மகிழ்ந்து பெருமை பேசுவதற்கு அப்பால் எழுச்சிகள் தொடர்ச்சியாவதற்கு ஏற்றவகையில் உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய கட்டமைப்புக்களை உருவாக்கி உழைப்பதே வீழ்ச்சிகள் வளர்ச்சிகளாவதற்கான வழியாக அமையும்.

இதனை ஒவ்வொரு தமிழனும் நன்கு உணர்ந்து உணர்ச்சியால் உண்மைகளை உரைத்து உணர்வால் அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்க தன்னலமற்ற முறையில் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மதித்து இலட்சியத்தில் ஒன்றிப்புடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்பட வேண்டிய காலமிது.