எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

749 Views

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.

36285c05 f89c 4597 b66e 7c16b08fbf84 எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்  

  1. வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா?

பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, விலை மதிக்க முடியாத பார்வையினை விலையாகக் கொடுத்து, நிர்க்கதியானவர்களை இலங்கையில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்து விட்டன. இதனால் அவர்களை பாதுகாக்கும், பராமரிக்கும் நோக்கோடு ஏனைய காரணிகளால் பார்வை இழந்தவர்களையும் இணைத்து, இச்சங்கமானது உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பணிப்பரப்பு எல்லையாகக் கொண்டு, இப்பொழுது 278 பயனாளிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இச்சங்கமானது யாப்பு விதிகளுக்கு அமைவாக நான்கு சபைகளால் நிர்வகிக்கப்படுகின்றது. தொண்டு அடிப்படையில் ஒன்பது பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட இயக்குநர் சபையினால் சங்கமானது நிர்வகிக்கப்படும். நிரந்தர வைப்புகள், நிதியங்கள், உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான தீர்மானங்களை காப்பாளர் சபை இணைந்தே தீர்மானம் நிறைவேற்றும். பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாகுபாடுகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் முச்சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நியாயத் தீர்வை பெற்றுக் கொடுப்பது மூவர் கொண்ட எதிர்ச் சபையின் கடமையாகும்.

WhatsApp Image 2021 06 19 at 1.21.27 PM 1 எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

ஆண்டுக்கு ஒரு முறை கூடி கணக்கு அறிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கை என்பனவற்றை ஆய்விற்கு உட்படுத்தி  ஏற்பதும், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூடி இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதும் பொதுச் சபையின் கடமையாகும். ஆரம்ப கால கட்டங்களில் நிவாரண, வாழ்வாதார உதவிகளை கொடையாளிகளின் உதவியுடன் முன்னெடுத்ததோடு, படிப்படியாக கண் சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவி, கண்ணாடி, துணைக் கருவிகள் வழங்கல், கிணறு, மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள், போக்குவரத்திற்கான உதவிகள், பயிற்சி வகுப்புகளுக்கான உதவிகள் என முன்னேற்றமடைந்து முற்றாக பார்வையிழந்தவர்கள், பார்வை இழப்புடன் ஏனைய அவயங்களை இழந்தவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற திட்டங்களுடன் பார்வையற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வளர்ச்சிப் படியில் கால் பதித்தது. அனர்த்தங்களின் பொழுதும், இயலுமான போதும் ஏனைய சாதாரண மக்களுக்கான உதவும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்தது. இருப்பினும் அனைத்துத் திட்டங்களுமே தற்காலிகமாகவே இடம்பெறுகின்றன. திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவ்வப்பொழுது கொடையாளிகளைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது.

WhatsApp Image 2021 06 19 at 1.21.27 PM 3 எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

  1. சிறப்புத் தேவை உள்ளவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள உங்களது சங்கம், எதிர் நோக்குகின்ற சவால்கள் எவை? அதனை எப்படிக் கையாள்கின்றீர்கள்?

முதலில் இயல்பான மனித செயற்றிறனில் இருந்து மாறுபட்ட சிறப்புத் திறனைக் கொண்டு விளங்கும் இவர்கள், கல்வி ரீதியாக எதிர் கொள்ளும் சவால்களைப் பொறுத்தமட்டில் பார்வை அற்றோருக்கான கற்றல் செயல் நூல்கள், கணினிசார் பயிற்சி, சிறப்புத் தேவையுள்ள ஆசிரியர்கள் போன்ற தேவைகள் கிடைப்பதில்லை. இவ்வாறே சிக்கல்களை எதிர்கொண்டு, கற்றுப் பட்டதாரியாகும் இவர்கள், வேலை வாய்ப்பு என்ற விடயத்தில்  வயது, மாற்றுத் திறன் போன்ற காரணிகளைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுகின்றார்கள்.

மருத்துவ சவால்களைப் பொறுத்த மட்டில் கண்மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான போதிய நிதி மற்றும் தொழில் நுட்ப வளமின்மை.

WhatsApp Image 2021 06 19 at 1.21.27 PM எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

வாழ்வாதார சவால்களைப் பொறுத்த மட்டில் முழுமையற்ற வாழ்வாதாரத் திட்டங்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழையாமை, இயலாமை, பொருத்தமற்ற வாழ்வாதார மூலம் சமூகச் சீர்கேடுகள் போன்ற காரணிகள் வாழ்வாதாரத் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. திட்டங்களை நன்கு ஆராய்ந்து முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தி வருகின்றோம்.

அடிப்படைத் தேவைகளுக்கான சவால்களைப் பொறுத்த மட்டில் கிணறு, கழிப்பறை, வீட்டுத் திருத்தங்கள் போன்ற செயற்பாடுகளைப் போதுமான அளவு முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான கொடையாளி அன்பர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம்.

போக்குவரத்து சவால்களைப் பொறுத்த மட்டில்  பொதுப் போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்க முடியாமை, அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான வசதிகள் இன்மை, தனித்து நடமாடுவதற்கான தொழில் நுட்பக் கருவிகள் இன்மை போன்ற சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நாம், இன்னொருவருடைய உதவியுடன் இச்சவால்களை சமாளித்து வருகின்றோம்.

தொடர்பாடல் சவால்களைப் பொறுத்த மட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தக் கூடிய திறன் கைபேசிகளை பெற்றுக் கொள்வதற்கான வளமின்மை போன்றன நாம் எதிர் நோக்கும் சவால்களாகும்.

  1. எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, அதன் நிமித்தம் இரண்டு கண்கள் உட்பட பார்வை இழந்த உங்களின் அங்கத்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பணியில் புலம்பெயர்ந்த எங்களது மக்களின் மனநிலையும் பங்கெடுப்பும் எவ்வாறு உள்ளது?

WhatsApp Image 2021 06 19 at 1.21.27 PM 2 எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

பதில் – தாயக மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் மிகவும் கரிசனை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருங்கிணைந்து செயற்படும் மனநிலை குறைந்து காணப்படுகின்றது. இதனால் அனேகமான செயற் திட்டங்கள்  தற்காலிக தீர்வையே தருகின்றன. வெளித் தோற்றங்களைப் பார்த்தும், ஏற்படுகின்ற அனுதாபத்தின் அடிப்படையிலுமே உதவுகின்ற மனநிலையினை  அனேகர் கொண்டுள்ளார்கள். சிந்தித்துத் திடமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறு சிறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மனநிலையினை வளர்த்துக் கொள்ளுகின்ற பொழுது தாயகத்தில் கையேந்தும் நிலையைக் குறைக்க முடியும்

  1. கோவிட் 19 பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு வரும் இன்றைய சூழலில் உங்களது அங்கத்தவர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களும் தேவைகளும் எவை?

பதில் – இன்று ஒரு கிலோ அரிசி- 130ரூபா, ஒரு கிலோ மீன்- 400 முதல் 1000 ரூபாய், கோழி இறைச்சி- 800 ரூபாய், வெங்காயம்-300 ரூபாய் என மரக்கறிகள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன. நாளாந்தம் நாட்கூலி செய்யும் ஒருவரின் உழைப்பு ஒருநாள் செலவிற்கே போதுமானது. இதிலும் பார்வையற்ற குடும்பங்கள் மிகவும் நலிவடைந்து, அடுத்தவர் தயவையே அதிகம் நம்பியிருப்பவர்கள். இந்த நிலையில் அடிக்கடி முடக்க நிலை ஏற்படுத்தப் படுகின்றது. தற்சமயம்கூட இருபது நாட்களாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளது. தனியார் போக்குவரத்துகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்ல முடியாது எமது பார்வையற்ற குடும்பங்கள் திண்டாடுகின்றார்கள். உணவு நெருக்கடியால் அவதிப்படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உலர் உணவுத் திட்டங்களையும், மருந்துப் பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், போக்குவரத்து உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது

 

Leave a Reply