எல்லையிலிருந்து பின்வாங்கும் இந்திய – சீன படைகள்

இரு நாட்டு இராணுவத் தளபதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைவாக இந்திய – சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனப் படையினர் பின்வாங்கியதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் கிழக்கு லாடக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்றது. மே 6ஆம் திகதி இரு நாட்டுப் படையினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கமைவாக சீன இராணுவத் துருப்புகள்கள் சில கிலோமீற்றர் பின்வாங்கின.

அதேவேளை ஜுன் 15, 16 ஆகிய திகதிகளில் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்குமிடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்தியப் படையினர் 20 பேரும், சீனப் படையினர் 40 பேரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து இரு நாடுகளும் எல்லையில் தங்களின் படைகளைக் குவித்ததால், பதற்றம் நிலவி வந்தது. அதனால் இரு நாட்டு இராணுவத் தளபதிகளிடையே கடந்த 01ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக தற்போது சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து பின்வாங்கியிருப்பதாக இந்திய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இவர்கள் 2 கிலோமீற்றர் வரை பின்வாங்கியுள்ளனர்.

இதேபோல் இந்தியப் படைகளும் அப்பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது. அதே சமயம் கல்வான் நதிப் பகுதியில் உள்ள சீன கனரக கவச வாகனங்கள் இன்னும் பின்வாங்கவில்லை எனவும், இந்திய இராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.