யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது.
மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று சிறிலங்கா அரசு தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடியபோதே கோத்தபாய இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
காணாமல்போனோர் பிரச்சினையானது அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதற்கான தீர்வு இழுபட்டு செல்கின்றது. எமது இராணுவத்தினரிடம் 5000பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு சென்றவர்கள். மீளத்திரும்பி வரவில்லை. யுத்த பூமிக்கு செல்பவர்கள் உயிரிழக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படமுடியாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுகின்றனர்.
யுத்தத்தின்போது புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு இவ்வாறு நடந்துள்ளது. யுத்தத்தின்போது 6000 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்க்கப்படவில்லை. யுத்த களத்தில் சடலங்கை மீட்க முடியாத சூழல் ஏற்படும். அது தொடர்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஆனால் சடலங்கள் மீட்கப்படாவிட்டால் தனது பிள்ளைகளோ கணவரோ இறந்ததை அந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எமது இராணுவத்தரப்பிலேயே உடல்கள் மீட்கப்படாதவர்களது உறவினர்கள் பலர் சாத்திரக்காரர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறுவதாக கூறுவார்கள்.
முகமாலை யுத்தத்தின்போது 129 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்கப்படவில்லை. ஒரு மாதத்திற்குப் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் சிதைந்தநிலையிலான சடலங்களை எம்மிடம் கொண்டுவந்து ஒப்படைக்கப்பார்த்தது. ஆனால் அடையாளம் தெரியாத அந்த சடலங்களை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. ஏனெனில் அடையாளங் காணாத சடலங்களை நாம் எப்படி உறவினர்களிடம் கையளிப்பது.
எமது ஆட்சியின் போத நிலத்தடியில் சிறைகூடங்கள் உள்ளதாகவும் அதற்குள் காணாமல்போனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் கடந்த அரசாங்கத்தில் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. காணாமல்போனோர் உயிரிழந்துள்ளதே உண்மையாகும். நாம் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாது. இந்த விடயம் தொடர்பில் இவ்வாறான தீர்வையே காணமுடியும்.