எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

538 Views

கிழக்கு மாகாணத்தின் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சுட்டிக் காட்டினாலும், பல பிரச்சினைகள் தொடர்ச்சியாக முளைவிடும் நிலையிலேயே இருந்து வருகின்றன.

குறிப்பாக கிழக்கில் காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களப் பிரச்சினையென பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது.

கிழக்கில் தமிழ் மக்களுக்கு எழும் பிரச்சினைகளை நாங்கள் பேசிவிட்டு கடந்து செல்லும் நிலையே தொடர்ச்சியாக இருந்து வருகின்றதே தவிர, அதற்கான எவ்வாறான தீர்வினை வழங்கலாம் என்பதை கண்டுபிடித்து வழங்குவதற்கு நாம் தவறுகின்றோம்.

குறிப்பாக வடகிழக்கில் தமிழர்களின் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுவதாக நாங்கள் பலகாலமாக குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால் எமது தாயகப் பகுதிகளை பாதுகாப்பதற்கு நாங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

இன்று புலம்பெயர்ந்துள்ள மக்கள், வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதி சிங்களவர்களினால் அபகரிக்கப்படுகின்றது, வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இக்குற்றச்சாட்டினை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால் அக்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அவற்றினை தடுப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பாரிய கடமையாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் பறிக்கப்படுவதற்கு வெறுமனே பேரினவாதத்தினை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இதனை யாரும் ஏற்றுக்கொண்டாலும்சரி, ஏற்றுக்கொள்ளா விட்டாலும்சரி இதுதான் உண்மை.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்ட காணிகள், இன்று சிங்களவர்களினால் மிகவும் இலகுவாக பிடிக்கப்பட்டு, அங்கு சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்ததிற்கு முன்பாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் செறிவாக இருந்த தமிழர்கள், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் செறிவாக வாழும் நிலையுள்ளது.

குறிப்பாக, தமிழர்கள் வாழும் நிலங்கள் வளம் மிக்கதாக காணப்பட்டதன் காரணமாக, அவை திட்டமிடப்பட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புக்கள் என்பது விவசாய செய்கை, தோட்டச் செய்கை, சேனைப் பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவலி அபிவிருத்தி, மதுறு ஓயா அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழர்களின் சரியான நகர்வுகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் அசண்டையீனம், அக்கறையின்மை போன்றவையும் இதற்கு காரணமாக கொள்ள முடியும்.

கடந்தக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அங்குள்ள காணிகளை பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும்; புலம்பெயர்ந்துள்ள மக்கள் எல்லைப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவ்வாறான எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் நடைபெற்றதை காண முடியவில்லை. அதற்கு அக்கறை செலுத்தும் நிலைமை உருவாகக்கூடவில்லையென்பதே கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலந்தனை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் சிங்களவர்களினால் காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். 2010ஆம் ஆண்டு தொடக்கம் சிங்களவர்களின் அத்துமீறல்கள் இப்பகுதியில் இருந்தபோதிலும், இங்குள்ள காணிகளை பாதுகாப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

01 4 எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

குறிப்பாக குறித்த பகுதி வளமான பகுதியாகும். அது மேய்ச்சல் தரைக்கு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டபோதிலும், அவற்றிற்கான உரிமமோ அதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களோ இல்லை. குறித்த பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மேய்க்கப்படுகின்றன. ஆனால் அங்கு பால் பதனிடும் தொழிற்சாலை அமைத்து, அங்கு பெறப்படும் பாலை மூலப்பொருளாக கொண்டு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான ஏது நிலைகள் உள்ள போதிலும் அதனை மேற்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை.

அல்லது அங்குள்ள காணிகளைப் பெற்று கால்நடை வளர்ப்புடன், உப பயிர்ச் செய்கை அல்லது வேறு உற்பத்திகளை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ள போதிலும், அவற்றினை முன்னெடுப்பதற்கான முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள சிங்களவர்களை அரசாங்கம் பயன்படுத்தி, அங்கு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது திட்டமிடப்பட்ட வகையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

இதே போன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் காணப்படுகின்றன. இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காடுகள் சார்ந்த பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பகுதிகள் அபகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

IMG 0109 எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

இவ்வாறுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், எல்லைப் பகுதிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் அரசுகளினால் மிகவும் சூட்சுமமான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமது கால்நடைகளை தமது பகுதிக்குள் வளர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எமது நிலங்களை நாங்கள் பாதுகாக்கத் தவறியதேயாகும். எல்லைப் பகுதியில் உள்ள காணிகளை குறைந்தது நீண்டகால குத்தகை அடிப்படையிலாவது கொள்வனவு செய்து, அவற்றினை விவசாய செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும்போது, அந்த காணிகளை பாதுகாக்க முடியும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பாலான தமிழர்கள் அங்கு இல்லை. அம்பாறை நகரில் இருந்த தமிழர்களும் தற்போது அங்கு இல்லை. எல்லைப் பகுதிகள் முற்றாக பறிபோய் விட்டன. அதன் காரணமாகவே அந்த மாவட்டங்களில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகும் நிலையேற்பட்டுள்ளது.

IMG 0105 1 எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களால் தமிழர்களின் வளங்கள் பெருமளவில் சுரண்டப்பட்டு விட்டன. அந்த வளங்கள் சுரண்டப்பட்டு செல்வதற்கு எமது சரியான திட்டமிடல் இல்லாமையும் காரணமாக அமைந்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இன்று அக்கரைப்பற்று தொடக்கம் பொத்துவில் வரையான பகுதியிலேயே தமிழர்களின் காணி வளம் ஒரளவு இருக்கின்றது. அவற்றினையும் நாங்கள் சரியான திட்டமிடல் மூலம் பாதுகாக்க தவறுவோமானால் அதனையும் இழக்கும் நிலையேற்படும்.

இதேபோன்ற நிலைமைதான் இன்று திருகோணமலை மாவட்டத்திலும் இருக்கின்றது. அங்கு வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளும், இன்று சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால், இன்று திருகோணமலை மாவட்டம் முழுமையாக  சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

அம்பாறை – திருகோணமலை மாவட்டங்களுக்கு ஏற்பட்ட நிலைமை, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினை நாங்கள் கட்டுப்படுத்தி, எமது தாயகப் பகுதியின் இதயப் பகுதியை பாதுகாக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் சிறந்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்பு  ஒன்றினை உருவாக்க வேண்டும்.

அந்தக் கட்டமைப்பானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசியத்துடன் செயற்படும் சிவில் சமூக பிரதிநிதிகள், நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசிய அரசியலில் உள்ள அரசியல்வாதிகள் ஆகியோர் இணைக்கப்பட்டு, இந்த குழு அமைக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக பிரதேசங்களில் உள்ள வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக காணிகளை பாதுகாக்க முடியும் என்பதுடன்; பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் ஏற்படுத்தி. வேலையில்லா திண்டாட்டங்களை தமிழர் பகுதிகளில் குறைத்திடவும் வழியேற்படுத்தும்.

IMG 0142 எமது தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கின்றோம்-வா.கிருஸ்ணா

இவற்றினை நாங்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தும்போதே எமது காணிகளையும், எமது வளங்களையும் பாதுகாக்க முடியும். மாறாக நாங்கள் எமது பகுதிகளை அபகரிக்கும்போது, வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு, காரசாரமான பதிவுகளை இடுவதன் மூலமோ புலம்பெயர் தேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்துதன் மூலமோ எமது காணிகளை பாதுகாக்க முடியாது.

இனிவரும் காலங்களிலாவது வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியவாதிகளும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் தேசியவாதிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

Leave a Reply