எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே! மற்றும் மறை மாவட்ட குருமார்களே!

கடந்த 01/04/2021 அன்றையநாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் இடியாய் இறங்கிய துயரநாள் என்று மறைந்த முன்னாள் மன்னார் ஆயருக்கு “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.

ஆயரின் மறைவு குறித்து “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை,

“எமது தாயகத்தில் சிங்கள இனவாத அட்டூழியங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கலுக்கெதிராகவும் இறுதி வரை அறப்போர் புரிந்து வந்த மாமனிதர் எங்கள் வணக்கத்துக்குரிய ஓய்வுநிலை மன்னார் மறைமாவட்ட ஆண்டகை இராயப்பு யோசப் அவர்கள் இயற்கை எய்திய செய்தி இன விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களின் மனங்களில் ஆறாத்துயரையும், இடைவெளியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழர் தாயக மண்ணில் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போரின் போது ஆட்சியில் இருந்த சிறிலங்கா அரசும் அதனது அரச படையினரும் தமிழ் மக்களின் மீது மிகப்பெரும் பொருளாதார தடையை   விதித்திருந்தனர்.

1960களில் பியாவ்ரா பிரதேசங்கள் மீது நைஜீரியா அரசு விதித்த பொருளாதாரத்தடையிலும் விட மோசமான பொருளாதாரத்தடைகளையும் மீன் பிடித்தடைகளையும் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு கட்டவிழ்த்திருந்தது. இதனால் யுத்த கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உள்ள மக்களின் அன்றாட  வாழ்வாதாரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த காலங்களில் அந்த மக்களின் அவலவாழ்வை வெளியுலகிற்கு கொண்டு வந்து  இறைபணியோடு, போர்ச்சூழல் வாழ்வையும் சமமாக மதித்து நின்று சிறிலங்கா அரசை நெஞ்சுறுதியோடு கேட்டு தமிழ் பேசும் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காய் போராடிய ஒரு புனிதருக்கு “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” சிரம் தாழ்த்தி அகவணக்கம் செலுத்துகின்றது.

தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான அடையாளங்களுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனம் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமைக்கு   அவர்கள் உரித்தானவர்கள் எனும் தமிழ்த்தேசிய சித்தாந்தத்தில் எத்தகைய இடர்கள் வந்தபோதும் துணிந்து பயணித்த மகானை இன்று தமிழ்பேசும் நல் உலகம் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது.

உலக வரலாற்றின் இயங்கு நியதிகளுக்கு உட்பட்டு ஒடுக்கு முறைகளை வலிந்து திணிக்கின்ற சிங்கள இனவாத அரச இயந்திரத்திற்கும், ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கும் இடையில் நின்று கொண்டு பாதிப்புற்ற தமிழ் மக்களையும் அவர்களது பாரம்பரிய தாயக நிலப்பரப்பையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்த முற்போக்கான சிந்தனை கொண்ட மனிதவுரிமைகள் செயற்பாட்டாளராக இறைபணியையும், தமிழ்த்தேசியப் பணியையும் சமாந்தரமாக முன்னெடுத்து அடக்குமுறைகளுக்கு உள்ளான மனிதகுல விடுதலைக்காக பாடுபட்ட வழிகாட்டிகள் வரிசையில் ஆண்டகை இராயப்பு யோசப் அவர்களும் வரலாற்றில் தன் பெயரை பொறித்துக்கொண்டார்.

விடுதலைப்போரட்டத்தின் ஆயுத மெளனிப்பிற்கு பின்னர் சிங்களப்பேரினவாதத்தின் அடக்குமுறைகளும் நில வன்பறிப்புக்களும், சட்டத்திற்குப்புறம்பான கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், தமிழர் குடியிருப்புக்களை சுற்றிலும் திட்டமிட்டு அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்கள் என மிகவும் தீவிரமாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற கடந்தகால ஆபத்தான சூழ்நிலைகளிலும் இறுதிப்போர்ச்சூழலில் சர்வதேசத்தின்  ஆதரவுடன் சிங்கள இனவாத அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் துல்லியமான கணக்கெடுப்புடன் அதன் விபரங்களை உள்நாட்டிற்குள்ளும் வெளியுலகத்திறக்கும் தெரிவித்து அதனை ஆதாரங்கள் மூலமாக நிரூபித்தும் காட்டிய வணக்கத்துக்குரிய ஆயர் அவர்களின் மறைவு என்பது உரிமைக்காக போராடி வரும் தமிழ்பேசும் மக்களுக்கு  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இருப்பினும் இழப்புக்கள் எவையும் எமது மக்களுக்கு புதியனவல்ல, தமிழ் மக்கள் அனைவரும் விரைவில் மீண்டெழுந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் எமது மக்களுக்காக ஆற்றிய ஆன்மீக வழிப்போராட்டங்களை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை சிவில் சமூக அமைப்பாகிய நாம் சிங்கள பேரினவாத அரசிற்கும் அதன் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்தும்  அமைதி வழியில் முன்னெடுத்துச் செல்வோம். எமது நாகரீக அரசியல் மரபுகளைத்தழுவிய  சட்ட ரீதியான அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு தடை செய்த போதும், அமைதி வழியில் போராடுகின்ற அறவழி உணர்வுகளை நிர்தாட்சண்யமாக அசட்டை செய்யும் போதும், அடக்குமுறைகரம் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பல்வித உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய போதும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர விடுதலைப்போராட்ட வரலாறுகளும், எமது கடந்து வந்த வலிகள் நிறைந்த வரலாற்றுப்ப் படிப்பினைகளும் எமக்கு மன உறுதியை அளிக்கின்றன.

தமிழ் மக்களாகிய நாம் காலம் காலமாக அமைதி வழியிலேயே எங்களது அரசியல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். நாம் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக எமது முன்னோர்களின் அறவழியில் அடையாள ரீதியாக நடாத்திய அறவழிப் போராட்டங்களைக் கூட  சிறிலங்கா பேரினவாத அரசுகள் எதேச்சதிகார, சர்வாதிகார கரம் கொண்டு நசுக்கியது. இருந்தாலும் வரலாறுகளின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு எமது மக்களின் உரிமைகளான தன்னாட்சி அதிகார கோட்பாடுகளை வலியுறுத்தியும், திட்டமிடப்பட்ட இனவழிப்பு, நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர், சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பிலான அனைத்து போராட்டங்களையும், ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் சிங்கள பேரினவாத இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக இருந்து, தமிழ் மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆண்டகை இராயப்பு யோசப் அடிகளார் அவர்களின் வழியில் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” தொடர்ந்தும் போராடும் என உறுதி எடுத்துக்கொள்கின்றது.இந்த நாளில் ஆண்டகை அவர்களின் ஆத்மா  இறைவனடி சேர நாம் அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு, மறைந்த அந்தப்புனிதரை, மானுடநேசரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தினையும் தெரவித்துக்கொள்ளும் இந்நாளில் நாம் அனைவரும் இன, மத, அரசியல்கட்சி பேதமற்ற ஒன்றுபட்ட தமிழர் சக்தியாக  ஒன்றிணைந்து அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் துணிந்து போராடுவோம் என ஆண்டகையினது இழப்பின்  வலிகளுக்குள் எம்மை உள்ளிருத்தி உறுதியோடு பயணிப்போமென  உறுதி எடுத்துக்கொள்வோம்” என்றுள்ளது.