எத்தியோப்பியா இனப்படுகொலை தொடர்பாக WHO தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் – ICCயில் புகார்

எத்தியோப்பியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எத்தியோப்பியர்களைக் கொல்வது, தன்னிச்சையாக தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான முடிவெடுத்தவர் என்று 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அமெரிக்க பொருளாதார வல்லுநரான டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் 2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் பதவியைப் பெறுவதற்கு முன்னர், அவர் முதன் முதலில் 2005 மற்றும் 2012 இற்கு இடையில் எத்தியோப்பியாவின் சுகாதார அமைச்சராகவும் பின்னர் 2012 முதல் 2016 வரை நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்த நேரத்தில்தான் அவர் நாட்டின் மீது ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். ஸ்டெய்ன்மேன் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக, அமெரிக்க வெளியுறவுத்துறையின் மனித உரிமை அறிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பகுப்பாய்வு நிறுவனங்களால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களையும் மேற்கோள் காட்டுகிறார்.

அந்த அறிக்கைகளில் எங்குமே அதானோம் கெப்ரேயஸ் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த அறிக்கையில் அதானோம் அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டில் நடந்த போராட்டங்களை ஒடுக்கும்போது பாதுகாப்பு படையினர் மக்களை கொலை செய்தனர், கைது செய்தனர், அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரில், அதானோம் கெப்ரேயஸ் கொலை செய்வதை மேற்பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அம்ஹாரா, கொன்சோ, ஓரோமோ மற்றும் சோமாலிய பழங்குடியின உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனை அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவித்து அந்த பழங்குடியினரை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் இந்த செயல்கள் நடைபெற்றன என தெரிவித்தார்.

டெட்ரோஸ் அதானோம், இதுபற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் பலமுறை மறுத்து வருகிறார், குறிப்பாக எத்தியோப்பிய மோதலில் தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஸ்டெய்ன்மேன் அளித்த இந்த சமீபத்திய புகார் குறித்து அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.