ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசு

திருக்கோணமலை பெரியகுளம் பகுதியில் 99 வீதம் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் சட்டவிரோதமாக விகாரை அமைப்பதன் மூலம் இனமுறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரால் குறித்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தற்காலிக தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் இராணுவத்தின் உதவியுடன் கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் (30.09.2023) பகல் வேளையில் ராணுவத்தின் உதவியுடன் கட்டுமான பணிகள் இடம் பெற்றன.

இதனால் கோபமற்ற குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்றைய தினம் (01.10.2023) தார்மீக ரீதியில் தங்களுடைய எதிர்ப்பை காட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். எனினும் நிலாவெளி போலீசார் திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றினை பெற்று அதன் மூலம் இன்றைய கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதை தடுத்தனர்.

குறித்த பகுதி பொதுமக்கள் இவ்வாறு தங்களுடைய பகுதியில் சட்டவிரோத விகாரை அமைப்பதன் காரணமாக விரக்தி அடைந்து கொதித்து போய் உள்ள நிலையில், இன்றைய தினம் சல்லி, சாம்பல்தீவு, இளுப்பன்குளம், ஆறாம் கட்டை போன்ற சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் இணைந்து பாரிய அளவில் எதிர்ப்பைக் காட்ட இருந்த நிலையில் போலீசாரின் அடக்குமுறை காரணமாக இலங்கை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்பட்டது.

TRINCO THAILAND BUDDHIST 2 ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசுதடை உத்தரவின் காரணமாக மக்கள் போராட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், தடை உத்தரவில் பெயர் குறிப்பிடப்படாத ஏற்பட்டளர்கள் மாத்திரம் காலை 10:30 மணி அளவில் சட்ட விரோத விகாரைக்கு முன்னால் ஒன்று கூடி, ஊடகங்களுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க முற்பட்ட போது, போலீசார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் தடை ஏற்படுத்தினர்.

மேலும், சட்ட விரோதமாக குறித்த இடத்தில் விகாரை அமைத்து இனமுறுகலை ஏற்படுத்த முற்படும், பௌத்தப்பிக்குவுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார், தமிழ் மக்களின் தார்மீக எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த விடாது தடுத்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ் அவர்கள் தன்னுடைய கருத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க முற்பட்டபோது போலீசார் இடையில் குறுக்கிட்டு, அவரது கருத்தை தெரிவிக்க விடாது அவரை தாக்க முற்பட்டனர். மேலும் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தினர்.

தாயக ஜனநாயக கட்சியின் தலைவர் நிமலன் விஸ்வநாதன், தனது கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது போலீசார் ஊடகங்களுக்கு கருத்தை தெரிவிக்க தடை செய்தனர். பின்னர் குறிப்பிட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்டபோதும், போலீசார் மீண்டும் தலையிட்டு கருத்து தெரிவிப்பதை தடை செய்தனர்.

ஊடகங்களின் ஊடக சுதந்திரம் இவ்வாறு தடை செய்யப்படுவது கண்டிக்கத்தக்க விடயம் என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களுடைய கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இவ்விடயத்தில் குறித்த பகுதி மக்கள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகளும் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையிலும் அரசாங்கம் இவ்வாறான சட்ட விரோத விகாரை அமைப்பதற்கு தொடர்ச்சியாக துணை போவதுடன், தேவையற்ற இனமுருகலை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கின்றது என்பதையும் கண்டிக்கின்றனர்.

மேலும், மக்கள் சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்பு இல்லை என்ற கருத்தை பிக்குகள் குழு முன்வைப்பதுடன், மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த விடாது தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். நிலாவெளி போலீசார் கிராமங்களில் கூட்டங்கள் வைத்து மக்களை அச்சுறுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உபுல் சந்தரா

Journalist