உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக பொறுப்புக் கூறுவதில் இலங்கை தோல்வி அடைந்துள்ளது

இலங்கை கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படாமை கவலை அளிப்பதாகவும் இதனால் புதியதொரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுவது குறித்து தனக்கு நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பிலான தீர்மானம் குறித்து இதற்கு முன்னர் எட்டிய முடிவுகளுக்கு அப்பாற் சென்று புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஒன்று மக்களுக்காகவே செயற்பட வேண்டும் என்பதுடன், சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும் எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை பெற்றுக் கொண்டவற்றை பாதுகாத்துக் கொள்ளுமாறும், முன்னேற்றிக் கொள்ளுமாறும் தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக காணாமல் போனோரை கண்டறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தை முன்னேற்றமடைய செய்ய அரசியல் ரீதியிலும், வளங்கள் ரீதியிலும் உதவிகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து இனங்களிலும் காணாமல் போயுள்ள மக்களின் உறவினர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜனநாயகத்தின் பிரதான தூண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்க வேண்டிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறிய அவர், பாதுகாப்பு அமைச்சின் கீழ் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாக சிவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் தான் கவலை அடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார்.

வைராக்கியத்துடனான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் வேறு விதமாக (வித்தியாசமாக) கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படாமை கவலை அளிப்பதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பாதுகாப்பு தரப்பு புனரமைக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடந்த காலங்களில் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறுவதில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் புதியதொரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுவது குறித்து தனக்கு நம்பிக்கை கொள்ள முடியாது என மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார்.