ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உலங்குவானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அமெரிக்க படையினர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அல்கொய்தா, தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க இராணுவபடைகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 13 ஆயிரம் அமெரிக்க இராணுவ படையினர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் மீது தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். சார்க் மாவட்டத்தில் உள்ள லோகார் பகுதியில் ஹெலிகாப்டரை அதிகாலை 1 மணிக்கு சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.