உலகே பாடம் படி! இது மே 18 – முனைவர் கு.அரசேந்திரன்

593 Views

நாங்கள் அழுத நாள். அழுது அழுது அழிந்த நாள். இல்லை அழிக்கப்பட்ட நாள். தாய்மார்கள் மார்பில் பால் குடித்து, ஆசை பொங்கப் பொங்க நாங்கள் ஊட்டியதால் மிகையாகப் பால் குடித்து வாய்வழியே பால் ஒழுகத் தாய்முகம் பார்த்துக் குழந்தை சிரிக்க அக் குழந்தை முகம் பார்த்து நாங்கள் பார்த்த காலம் கனவாய்ப் போன நாள். குண்டு வீச்சில் வாய்வழியே குருதி கொப்புளிக்கக் குழந்தை இறந்த கொடுமையில் தாயும் துடித்து இறந்த நாள். எங்கள் இனமே ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு நாலா பக்கமும் மட்டுமல்ல வான்பக்கமுமாகச் சேர்ந்து ஐந்து பக்கமுமாகக் கொலை மின்னல் கோர இடி சூழ நாங்கள் அழிக்கப்பட்ட நாள்.

எங்கள் ஓலத்தை உலகிற்கறிவிக்க ஏடகம், ஊடகம் எவையும் இல்லை. கதிரவன் எரிக்க மழை அடிக்க வயிற்றில் பசிக்கனல் வதைக்க யார் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்; யார் இறக்கிறார்கள்; யாம் எப்பொழுது இறக்கப் போகிறோம் என்று துடிதுடிக்க ஓடிப் பார்த்து ஒட முடியாமல் விழுந்து எழுந்து விழுந்து எழ முடியாமல், சுருண்டு அழுது அழுத ஒலி யாருக்கும் கேட்காமல் உயிரோடு உயிராகக் கரிந்தழுது கரைபுரண்ட கண்ணீரும் குண்டு வீச்சில் உடல் கிழிந்த செந்நீரும் சேர்ந்து உப்புநீரும் செந்நீரும் பெருக எம் தாய்நிலம் ஏர் உழுத கழனியாக – ஆடையின்றி மாற்று உடையின்றி இயற்கைக் கடனடக்கி அடக்க முடியாமல் அவமானப்பட்டு ஐயோ ஐயோ என்ற ஓலம் எங்கும் எங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும் மரண ஓலங்களுக்கு இடையில் எம் இனம் சிக்கி அழிந்த நாளை நினைத்து நினைத்து விம்முகிறோம்.

எங்கள் அழுகையையும் அவலத்தையும்  ஆயிரம் பத்தாயிரம் இலக்கம் என்று தாண்டிச் சென்ற சாவினையும் கொண்டாடினான் பகைவன். அவனுக்கு ஆயுதம் கொடுத்துப் பணம் கொடுத்துக் கைகொடுத்து வேண்டிய வேண்டிய உதவிகள் புரிந்து தொண்டுகள் செய்தது உலகம். ஆண்டுகள் சென்றன. நாங்கள்  கண்ணீர் சிந்தியது உண்மை என்று  இன்று உலகம் கூறத் தொடங்கியிருக்கிக்கிறது. துண்டுக் காணியில் தூர தேசத்தில் அப்பொழுது நாங்கள் அழுத அழுகை இன்று உலகம் முழுதும் கேட்கிறது. வீடுகளில், தெருக்களில், மருத்துவமனைகளில் சுடுகாடாகப் பிணம் எரிக்கும் இடங்களில் எங்கும் எங்கும்.

நாங்களாவது அழுது அழுது இறந்தோம். இந்த கொரோனா அலையில் உலகம் அழாமலேயே இறக்கிறது. நாங்களாவது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இறந்தோம். இன்று பாருங்கள் கணவனைப் பார்த்து மனைவி அழ முடியவில்லை; மனைவியைப் பார்த்துக் கணவன் அழ முடியவில்லை. எங்கள் அழுகையை உலகம் பார்க்கவில்லை. உலகின் அழுகையை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு எவரும் மருந்து, மருத்துவர் அனுப்பவில்லை. இன்று எந்த மருந்தாலும் எந்த மருத்துவராலும் உலகத்திற்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

எங்கள் நாடு அன்று சுடுகாடாய் ஆனது. இன்று உலகமே சுடுகாடாகி எரிந்து கொண்டிருக்கிறது. எங்கள் மருத்துவமனைகளில் பகைவன் குண்டு வீசினான். பகைவனைப் பாராட்டிப் பக்கதுணை செய்தது உலகம். இன்று உலக மருத்துவமனைகள் செத்த பிணங்களாலும் சாகப் போகும் பிணங்களலும் பிதுங்கி வழிகின்றன. உலக அரசுகள் எல்லாம் எங்களை வேடிக்கை பார்த்தன. இன்று உலக அரசுகளை நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.

உலகம் கூடி எங்களை அழித்த போதும் எங்கள் தலைவர் எவரிடமும் மண்டியிடவில்லை. வல்லரசுகளும் அல்லரசுகளும் புல்லரசுகளும் இன்று நுண்நச்சுத் தொற்றியின் முன் மண்டியிட்டுக் கிடக்கின்றன. எங்களை அரசாக அன்று உலகம் ஏற்றிருந்தால், முழு உலகத்திற்கும்கூட நாங்கள் மருந்து கொடுத்துத் துணையாகியிருப்போம். ஏனென்றால் மக்களுக்கான அரசினை நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். இந்த உலகம் மக்கள் சாவில் தன்னை இன்று இயக்கிக் கொண்டிருக்கிறது. உலகத்திற்கு நாங்கள் பாடம் புகட்டவில்லை. உலகத்திற்குக் கொரோனா பாடம் புகட்டிக் கொண்டுள்ளது. உலகே பாடம் படி.

Leave a Reply