உயிர்வாழ்வதற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக நடைமுறைக்கிடுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27-09) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான பிரகடனம் எங்கே,அரசியல்யாப்பில் உயிர்வாழ்வதற்கான உரிமையினை கொடு,ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடு எங்கே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
உலகில் வாழும் யாருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அரசாங்கமும் அரச உத்தியோகத்தர்களும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அனைவரினதும் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற முன்நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதற்கான கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுபப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன் கவன ஈர்ப:பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.