உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்

475 Views

முள்ளி வாய்க்காலெம் முடிவல்ல அறிந்திடு

பள்ளிகொள்ள இது படியல்ல புரிந்திடு

எள்ளி நகைப்போரை புறந்தள்ளி நடந்திடு

துள்ளி எழுந்துமே தடைகளைக் கடந்திடு

 

வெண்ணை திரண்டுமே தாழியில் வரும்கணம்

கண்ணை மூடியே கரமதை விடுவதோ?

மண்ணை காத்திட மடிந்தவர் சந்ததி

திண்ணை குந்தியே தினங்களைப் போக்குமோ?

 

விழுந்து எழுந்திடா மழலையும் உள்ளதோ?

உயர்வு தாழ்விலா சாலையும் செல்லுமோ?

அலைகள் ஓய்ந்ததோர் ஆழியும் உள்ளதோ?

விலைகள் இன்றியே விடுதலை வெல்லுமோ?

 

எந்தக் கையது உடைந்திடும் போதிலும்

நம்பிக் கையது வாழ்வினைத் தாங்கிடும்

தும்பிக் கை-பலம் பேறுறு யானையும்

நம்பிக்கை கெடில் அடிமையே ஆகிடும்

 

பொன்னை புடமிடின் மின்னிடும் மேலுமாய்

மூங்கில் சுடப்படின் இசைத்திடும் கானமாய்

மண்ணுள் புதைந்தபின் முளைவிடும் வித்தென

உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்

 

இலக்கு மாறிடா தியங்கிட வேண்டுமே

கலக்கம் இன்றியே நடையிடு நீண்டுமே

பலத்தை வளர்த்துமே பறந்திடு மீண்டுமே

நிலத்தை வாழவை நீயதை ஆண்டுமே!

-மது நோமன்

Leave a Reply