‘உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும்’

631 Views

உலகை உள்ளங்கையில் கொண்டு வந்தாலும், உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும். 

பட்டி பெருக வேணும் தம்பிரானே!

பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே !

மேழி பெருக வேணும் தம்பிரானே !

மாரி மழை பெய்ய வேணும் தம்பிரானே !

என மழை சிறப்பாக பெய்ய வேண்டும் என வருண பகவானை வணங்கி, மேற்கொள்ளும் விவசாயத்தை, உயிராய் கருதிய எமது மூதாதையர் விட்டுச்சென்ற பாதையில் வளர்ந்து வருகின்ற சிறு மொட்டுக்களாகிய எமக்கு முன்னோர்கள் தடம் பதித்த விவசாயம் பற்றி தெரியவில்லை எனில், எமது பிற்கால சந்ததியினருக்கு விவசாயம் என்பது இரண்டாம் மொழி போன்றே தென்படும்.

காலை சேவல் கூவியதும் வீட்டை விட்டு வெளியேறும் விவசாயி, சேற்று வயல் மிதித்து, நாற்று நட்டு மனைவியின் கையால் கொடுக்கும் ஒரு வயிறு பழஞ்சோறினையும், பச்சை மிளகாயினையும் உண்டு விட்டு மீண்டும் மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது கிடைக்கும் ஒரு வித ஆனந்தம்,

இன்று கூலி ஆட்களை வைத்து வேலையை முடித்துவிட்டு ஏசி பூட்டிய வாகனத்தில் அமர்ந்து வெய்யில் படாமல் சென்று இறங்கிய இடத்திலேயே நின்றுகொண்டு வயலை ஒரு முறை பார்வையிட்டுவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் இன்றைய தலைமுறையினருக்கு  ஒருபோதும் இந்த இனிமை கிடைத்து விடாது.

உழவனின் வியர்வைத் துளி சிந்தி நெல் விளைந்த காலம் போய், பணத்தின் வாடை பட்டு நெல் விளையும் காலமாயிற்று.

காவேரி ஓரத்திலே

கால் பதிக்கும் ஈரத்திலே

காலையிலே நான் நடப்பேன்

கட்டழகி நீ வருவே

விதையை கொண்டுகிட்டு – நெல்லு

விதையை கொண்டுகிட்டு

வாய்க்கா வெட்டின களைப்பிலே – நான்

வந்து குந்துவேன் வரப்பிலே – புது

மஞ்சள் நிறத்திலே கொஞ்சும் முகத்திலே

நெஞ்சை பறித்திடும் வஞ்சிக் கொடி நீ

கஞ்சி கொண்டு வருவே – இன்பம் கலயத்திலே தருவே

என்று கலப்பையை தோள் மீது வைத்து களைப்புடன் உழவு வேலை செய்யும் விவசாயி, அவனுக்கு அன்புடன் கஞ்சி கொண்டு செல்லும் மனைவி. அதிகாலையில் எழுந்து அவசரம்  அவசரமாய் ஒரு உப்பில்லாத உணவினை சமைத்தெடுத்து அதனை கணவனுக்கும், தனக்கும் பிரித்து எடுத்துக்கொண்டு தொட்டிலில் அழுதுகொண்டே படுத்திருக்கும் குழந்தையை தூக்கி பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, கணவன் ஒரு புறம் மனைவி ஒரு புறமுமாய் வேலைக்குச் சென்று வரும் இன்றைய ஆண், பெண்களுக்கு விவசாயமும், அதில் ஒழிந்திருக்கும் சிறு சிறு மகிழ்ச்சியும் எங்கே தெரிந்துவிடப் போகின்றது.

ஏர் பூட்டி விவசாயம் செய்த காலத்தில் அயல் நாட்டின் வறுமை போக்கிய எம் நாடு; எப்பொழுது உழவு இயந்திரத்தில் கை பிடித்ததோ அப்பொழுதே எமது நாட்டு பஞ்சம் தீர்க்க அயலவர் கைகளை ஏந்தி நிற்கும் நிலை ஏற்பட்டது. பரம்பரை விவசாயிகள் என்று கொலரை தூக்கி விட்டு பெருமைப்பட்ட காலம் போய், விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகின்றனர் இன்றைய கால இளைஞர்கள். இருப்பினும் ஒன்றை அவர்கள் மறந்து போய் விட்டனர்.

எங்கேயோ ஒரு இடத்தில் யாரோ ஒரு விவசாயி சேற்றில் கால் வைப்பதனால் தான், இன்று எம் தட்டுக்களிலும் வயிறுகளிலும் ஒரு பருக்கை சோறேனும் செல்கின்றது.

ஆடு, மாடு, கோழிகளின் விலங்குக் கழிவுகளையும் வைக்கோல், இலை, தழைகளையும் உரமாக இட்டு மாடுகளில் ஏர் பூட்டி விவசாயம் செய்வதெல்லாம் பழைய முறை என்று யாரோ சிலர் கூறியதைக் கேட்டு, வணிக முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை உரங்களை தம்மிடம் இருக்கின்ற நகைகள், காணிகளை விற்று, அடைமானம் வைத்து, அவற்றை வாங்கி பயிர் செய்ய ஆரம்பித்த காலம் தொட்டு விவசாயிகள் தமக்குள் இருக்கும் திறன்களை தமக்குள்ளேயே பூட்டிக்கொண்டு, தமது ஆரோக்கியத்திற்கு தாமே தடைவிதித்துக் கொண்டனர். ஆனால் இன்று குறைவாக கருதி தூக்கிப் போட்ட இயற்கை உரங்களையே எம்மிடம் புதிய முறையில் அறிமுகப்படுத்தி நாமே அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும்படி செய்து விட்டனர். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்த பிள்ளை கூட இன்று வகுப்பறையில் அமர்ந்து விவசாய பாடத்தைக் கற்றுக் கொள்கின்றது.

பத்து மாதம் ஒரு தாய் தன் வயிற்றில் சுமந்து, தன் பிள்ளையை பெற்றெடுக்கும் பொழுதுதான், அவள் தன் வாழ்வின் அர்த்தத்தினை உணர்கின்றாள். பிஞ்சுக் குழந்தையின் கைகள் அவள் கன்னம் தொடும் வேளையில் அவள் கொண்ட பிரசவ வலி ஒரு நொடிப் பொழுதில் மறந்து போவதனைப் போன்று, இரவு பகலாக அரும்பாடுபட்டு தூக்கம் இன்றி, உணவு இன்றி  மழையிலும், வெயிலிலும் துவண்டுபோன விவசாயிக்கு காலைப்பொழுதினில் முத்து முத்தாக சிந்திய பனித்துளிகளின் பாரத்தினைத் தாங்காது தலை வணங்கி அவற்றினை ஏற்றுக்கொண்டு “பசும் பயிர் மேனிக்கு மணி மகுடமாய்” தூக்கக் கலக்கத்தில் எழுந்து வரும் விவசாயியை புன் சிரிப்புடன் வரவேற்க, ஆவலோடு நெல் மணிகளில் தன் முகம் புதைத்து நீண்ட மூச்சினை எடுத்துவிடும் விவசாயிக்கு அதுவரை அவன் பட்ட அத்துணை துன்பங்களும் கணப்பொழுதினில் மறந்துபோய் விடுகின்றது. கோடி கோடியாய் பண மழையில் புரண்டாலும் அந்த ஒரு நிமிட சந்தோசத்திற்கு இணையாகாது.

திக்குத் திக்காக சிதைந்திருக்கும் குடும்ப வாழ்வில் உழவர் திருநாள் என்று போற்றப்படும் தைத்திருநாளை மறக்காது நினைவு வைத்து வருடா வருடம் கொண்டாடும் எம் மக்களுக்கு உழவர்கள் பற்றியே மறந்து போய் விட்டது என்பது மறைக்கப்பட்ட உண்மையே.

பரம்பரை பரம்பரையாய் விவசாயத்தை மேற்கொண்டவர்களின் வழி வந்த பிள்ளைகள், விவசாயிகளையும், விவசாய நிலத்தையும், வேற்றுக்கிரக வாசியாகவே காண்கின்றனர். காலில் பட்ட மாறாத காயங்கள் கூட மாறிப்போகும் சேற்று வயல்தனில் நாற்று நட இறங்கினால், ஆனால் இன்று சேற்று வயலின் சிறிதளவு சேறு பட்டாலே தீண்டத் தகாதவை காலில் பட்டு விட்டதாகவே உணர்கின்றனர். சேற்று மண் மருந்தாக பயன்படுத்தப்பட்ட காலம் கடந்து, சேறு பட்டதற்கு மருத்துவரிடம் செல்கின்ற காலம் இப்பொழுது.

இப்படியே போனால், இருந்த இடம் கூட தெரியாது அழிவடைந்து கொண்டு செல்லும் சில வன விலங்குள் போன்று விவசாயமும் அழிவடைந்து போகும் என்பதில் ஐயமில்லை. மூடி இருக்கும் தமது கண்களில் இருந்து தமது கைகளை விலக்கி, என்று விவசாயத்தின் பெருமைதனை முழுமையாக உணர்கின்றனரோ அன்றைக்கு புதைந்து கிடக்கும் விவசாயிகளின் கனவுகளும் குறைந்து கொண்டு செல்லும். மக்களின் வாழ்க்கைக் காலமும் புத்துயிர் பெற்று ஆரோக்கியமான எதிர்காலத்தினை பெற முடியும்.

“வேரோடி விளாத்தி முழைத்தாலும் தாய் வழி தப்பாது” என்பதற்கிணங்க எவ்வளவு காலம் கடந்தாலும் நாம் ஒரு நெல்லினை மண்ணில் போட்டால், அது பல நெற்கதிர்களை எமக்கு நிச்சயமாக வழங்கும்.

Leave a Reply