உக்ரேனில் சண்டை நிறுத்தத்திற்கு இருதரப்பும் இணக்கம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியும் சந்தித்த பின்னர் கிழக்கு உக்ரேனில் முழுமையான யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணங்கியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், ஜனாதிபதி புட்டினும், ஜனாதிபதி ஸிலென்ஸ்கியும் நேற்று சந்தித்திருந்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனி சான்செலர் அங்கெலா மேர்க்கலின் அனுசரணையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே, மோதலுடன் தொடர்புபட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை செய்து பரிமாறுவதற்கு ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளன.

இதுதவிர, அடுத்தாண்டு மார்ச் மாத முடிவுக்குள், உக்ரேனின் மூன்று மேலதிக பிராந்தியங்களிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கும் ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளபோதும், எப்பகுதிகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, யுத்தநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்குமிடையில் நான்கு மாதங்களில் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்த செய்தியாளர் மாநாட்டில், பிரச்சினையைத் தணிப்பதை நோக்கிய முக்கியமான படியொன்று என பேச்சுக்களை ஜனாதிபதி புட்டின் புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், உக்ரேனூடான குழாய்கள் வழியான ரஷ்ய வாயு ஏற்றுமதிகளுக்கான முடக்கம் நீக்கிக் கொள்ளப்படும் என ஜனாதிபதி ஸிலென்ஸ்கி கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், ரஷ்ய ஆதரவுப் படைகளை விலக்கிக் கொள்வது, பிரிவினைவாதப் போராளிகளிடமுள்ள உக்ரேனிய பகுதிகளில் தேர்தல்கள் போன்ற விடயங்களில் ரஷ்யாவும், உக்ரேனும் தொடர்ந்தும் இணக்கமின்றியே காணப்படுகின்றன.

இதேவேளை, போராளிகளால் கடுப்படுத்தப்படும் டொன்பாஸ் பிராந்தியத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்குமாறு உக்ரேனிய அரசமைப்பு மாற்றமொன்றுக்கும் ஜனாதிபாதி புட்டின் அழைப்பு விடுத்ததுடன், குறித்த பிராந்தியத்தைக் கைப்பற்றுதலில் பங்கேற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்தும் கருத்தை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில், அமைத்திக்காக எந்தவொரு இடங்களையும் உக்ரேன் விட்டுக் கொடுக்காது என ஜனாதிபதி ஸிலென்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.