ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கை மைத்திரிக்கும் ரணிலுக்கும் தெரியும்: டில்லியில் மகிந்த அதிரடி

592 Views

இந்தியா – இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்r நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: –

கேள்வி:- நீங்கள் டெல்லிக்கு பயணமாக வந்திருப்பதையும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- என்னுடைய டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். இது நவம்பர் மாதத்தில் என்னுடைய சகோதரரும், இலங்கை ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பின்போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுக்காக போடப்பட்ட அஸ்திவாரம். இப்போது மேலும் வலுவடைந்துள்ளது.

பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் பயன் உள்ள சந்திப்பாக அமைந்தது. அவர் என்னிடம் மிகவும் நெருக்கமான நட்பை காட்டினார். நான் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன. நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

கேள்வி: – இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்தவெடிகுண்டு நாச வேலை பற்றி இந்தியா முன்கூட்டியே ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் நடந்துவிட்டதே? அப்போது ஜனாதிபதியாக இருந்த சிறிசேன தனக்கு அந்தத் தகவல் சொல்லப்படவில்லை என்று கூறியிருந்தாரே?

பதில்: – சிறிசேனவுக்கு இந்தியா அனுப்பிய எச்சரிக்கை தகவல் நன்றாகத் தெரியும். தகவல்கள் அனைத்தும் அவருக்கு சொல்லப்பட்டன. அப்போது, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற தவறு என் ஆட்சியில் நடக்காது. என்னுடைய கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒடுக்கியது.

அப்போது ஏற்படுத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான கட்டமைப்பை சிறிசேன, ரனில் விக்ரமசிங்கே ஆட்சி தகர்த்துவிட்டது. அதுமட்டுமல்ல, பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுத்த 70 உளவுத்துறை அதிகாரிகளில் சிலர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பலர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். சிலர் வேறு நாடுகளுக்கு சிறுசிறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில் பயங்கரவாதம் என்பது எல்லா நாடுகளுக்கும் சவாலாக உள்ளது. முக்கியமாக இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இருக்கிறது. ஏனென்றால், இருநாடுகளும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர், இலங்கையின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவருடைய 2 மகன்கள் தற்கொலை படையாக செயல்பட்டார்கள். அவர்களில் ஒருவர் இங்கிலாந்திலும், மற்றொருவர் ஆஸ்திரேலியாவிலும் உயர்படிப்பு படித்தவர்.

கேள்வி: – இந்தியா – இலங்கை உறவு வலுவடைந்து வந்ததாகச் சொன்னீர்கள். நீண்ட காலமாகவே இந்தியாவுக்கு, நீங்கள் சீனாவோடு மிக நெருக்கமாக உறவு வைத்திருக்கிறீர்கள் என்ற கவலை இருக்கிறதே?

பதில்:- எதற்காக இந்தியா அஞ்ச வேண்டும்? இந்தியா பெரிய வலுவான நாடு. அதனால், இந்த கவலை தேவையில்லை.

கேள்வி:- 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

பதில்:-13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. உண்மை என்னவென்றால், அந்த சட்டத்தை மாகாணசபை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

Leave a Reply