ஈழத்தமிழர் உரிமை மீட்பு பிராந்திய பொருளாதார மீட்டெடுப்புக்கு அவசியம்

726 Views

கொரோனாவுக்குப் பின்னரான பிராந்திய பொருளாதார மீட்டெடுப்பு என்பது, இன்று இந்திய அரசின் முக்கிய சிந்தனைகளில் ஒன்றாக அமைந்துள்ளதை இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் மிகத் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய சந்தையாக உள்ள இந்தியச் சந்தை சுதந்திரமாகவும், உறுதியாகவும் தொழிற்பட பொருட்களும், ஆட்களும் தடையின்றி இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பிலும், அதனைச் சூழவுள்ள இந்துமா கடல் பரப்பிலும் போக்குவரவு செய்தல் என்பது அதிமுக்கிய தேவையாகவும் இந்தியாவுக்கு உள்ளது.

இந்த வகையிலேயே கொழும்பு செயற்கைத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையும், திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தையும் இந்தியா தனது பொருட்களினதும், ஆட்களதும் நடமாட்டத்திற்கு தடையில்லா வகையில் வைத்திருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தல் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பாதுகாப்பு என்பதோடு அமையாது, இந்தியச் சந்தை நலன்களுடனும் தொடர்பான ஒன்றாகவும் உள்ளது.

இந்த அடிப்படையில் இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு உறவுமுறையினைப் பேண முற்படுதல் என்பதும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான இயல்பான தொடர்பாடல் முயற்சியாகவும் உள்ளது.

இந்தச் சந்தைநல இராணுவ நிலைப்பாட்டுக் கொள்கை வகுத்தலில் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் பங்கம் இல்லாத வகையில் இலங்கைக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தல் என்கிற இராசதந்திர உத்தியை முன்நிறுத்தி முயலுதல் என்பது இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியாக உள்ளது.

இந்த முயற்சியில் ஈழத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக தாயக, தேசிய, தன்னாட்சி உரிமையினைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசுடனான சுமுகமான உறவாடலுக்காகக் கவனத்தில் எடுக்காத செயற்பாடே, சிறீலங்கா தன்னை யாராலும் தட்டிக் கேட்க இயலாத இறைமையுள்ள தெற்காசிய அரசுகளில் ஒன்றாக முன்னிறுத்தி, ‘ஒரு நாடு ஒரு இனம்’ என்கிற சர்வாதிகார ஆட்சி முறைமையை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சனநாயக குடியரசு ஆட்சியென தொடர ஊக்கமும், ஆக்கமும் அளித்து வருகிறது.

முன்னாள் இந்தியப் பிரதமர் யவர்கலால் நேரு அவர்கள் மலையகத் தமிழர்களுக்கு நடைமுறை ஆட்சி உரிமை உண்டு முழு அளவிலான ஆட்சி உரிமை கோருங்கள் என அவருடைய மலையக வருகையின் பொழுது பகிரங்கமாகச் சொல்லி 1927 களிலேயே பின்னர் சிங்கள மேலாண்மை ஆட்சி தோன்றாது தடுக்க முற்பட்டவர்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்கு முழுஅளவிலான ஆதரவை அளித்து, ஈழத்தமிழர்களின் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் ஆயுத எதிர்ப்பின் மூலம் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்யப் புறப்பட்ட விடுதலைப்புலிகள் உட்பட்ட ஈழத்தமிழ்ப் பேராளிகளுக்கு தனது படைகள் மூலம் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியவர். கூடவே 1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட ஆடிக் கலவரத்தை உலகின் தீர்வுக்குரிய பிரச்சினையாக ஆர்ஜன்டீனா மூலம் அனைத்துலக மன்றத்தின் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று வாக்களிப்பு நடைபெறச் செய்து ஈழத்தமிழர் பிரச்சினையை உலகின் தீர்வுக்குரிய பிரச்சினையாக அன்றே இனங்காட்டியவர்.

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலம் முதலாக இன்றைய தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி அவர்கள் காலம் வரை அத்தனை முதலமைச்சர்களும் இந்திய மத்திய அரசிடம் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது வரலாறாக உள்ளது.

இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் அவரின் வெளிவிவகார அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீட்பு என்பதனை இந்திய இலங்கை உறவாடல் வழி உரிய முறையில் உரிய நேரத்தில் அவர்கள் அடைந்திட உதவிடல் வேண்டும்.

இதனை ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிச் செய்வதற்கு, இந்தியா ஈழத்தமிழர்களிடம் அவர்களின் உரிமைகள் மீட்புக் குறித்த தேவைகளைக் கருத்துக்களை ஈழத்திலும் உலகத்திலும் ஈழத்தமிழர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கேட்டறிய வேண்டும்.

ஈழத்தமிழ் மக்களுடனான உரையாடல், உறவாடல் என்பது  கோவிட் பின்னரான பிராந்திய பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்துமா கடல் பிரதேசத்தில் ஏற்படக் கூடிய தடைகளை வெல்வதற்கு, உலகளாவிய நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் அறிவையும், மூலதனங்களையும், ஆற்றல்களையும் இணைக்கும் செயற்பாடாகவும் அமையும்.

Leave a Reply