ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்

“போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம்.

இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது

  • வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல
  • நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி,
  • சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி,
  • அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை

உருவாக்குதல் எனத் தெளிவாக விளக்கப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு, இனம், நிறம், மொழி, அரசியல், கருத்து வேறுபாடுகள், தேசிய இனத்துவ சமூக மூலங்கள், சொத்துக்கள், உடல் வலுவின்மைகள், பிறப்பை மையப்படுத்திய சாதி, மற்றும் தகுதி பார்த்தல் போன்ற எல்லாவிதமான  வேறுபாடுகளும் நீக்கப்படுதல் தேவை எனவும் இப்பிரகடனம் சுட்டிக் காட்டியது. இவற்றை மனித குலத்திடை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய மில்லேனியத்தின் தொடக்க ஆண்டான 2000ஆம் ஆண்டை ‘அனைத்துலக அமைதிக்கான பண்பாட்டு ஆண்டு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. கூடவே 2001 முதல் 2010 வரையான பத்தாண்டுகளை ‘அமைதிக்கான பண்பாட்டை வளர்த்து, வன்முறையற்ற உலகைச் சிறுவர்களுக்குரித்தாக்குதல்’ என்ற உயர் நோக்கை உருவாக்கும் காலமாக அறிவிக்கவும் செய்தது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் திகதியை அமைதிக்கான பண்பாட்டை வளர்க்கும் ‘அமைதியில் இணைந்து வாழ்வதற்கான அனைத்துலக நாள்’ ஆகவும் கொண்டாடுமாறு ஐ.நா அழைப்பும் விடுத்தது.

அமைதியாக வாழ்தல், பொறுமையுடன் வாழ்தல், அனைவரையும் ஏற்று வாழ்தல், ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் என்பவற்றை வளர்ப்பதற்கான மக்கள் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான நாளாக ‘அமைதியில் இணைந்து வாழ்வதற்கான அனைத்துலக நாள்’ முன்னெடுக்கப்படல் வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா உட்பட தனது உறுப்புரிமை நாடுகளுக்கு எடுத்துரைத்தது.

ஆனால் சிறீலங்கா இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை அமைத்த அதே பத்தாண்டு காலத்தில்தான் அமைதிக்கான பண்பாட்டை அழிக்கும் ஈழத்தமிழினத்தின் மேலான இனஅழிப்பை முன்னெடுத்து, அதன் உச்சமாக 18.05.2009 அன்று புதிய மில்லேனியத்தின் முதல் உலக இனப்படுகொலை நாளை முள்ளிவாய்க்காலில் வரலாற்றுப் பதிவாக்கியது.

அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழினப் படுகொலைகளைச் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றியாக மே18இல் கொண்டாடி, போரை சிங்களவர்களின் மனநிலையில் உறுதியாகக் கட்டமைத்து, அமைதிக்கான பாதுகாப்பைச் சிங்களவர்களின் மனதில் கட்டியெழுப்பப்பட இயலாத ஒன்றாக்கி வருகிறது. ஒருநாடு ஒருசட்டம் என்னும் இன்றைய அரசாங்கத்தின் அரசியல் செயற்றிட்டத்தை சிங்கள மக்களின் மனதில் பௌத்தத்திற்கான புனித யுத்தமாக முன்னெடுக்க, இலங்கைத் தீவு சிங்களவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரே நாடு, ஆதலால் சிங்கள நாடு; அங்கு வாழ வேண்டியவர்கள் ஒரே இனத்தவர், அது சிங்கள இனத்தவர்; அங்கு உள்ளது ஒரே மதம், அது பௌத்த மதம் என்னும் சிங்களத் தொன்மமான மகாவம்ச மனநிலையை சிங்கள மக்கள் மனதில் திணித்து, தனது ஈழத் தமிழின அழிப்புக்கான சிங்களவர்களின் ஆதரவைப் பெருக்கி வருகிறது.

இதனாலேயே சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்து 2009ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலையாளரான கோத்தபாய இராஜபக்ச மீளவும் 2020இல் தேர்தல் மூலம் அரச அதிபராகி, அரச அதிபருக்குரிய தண்டனை விலக்கு உரிமையைப் பயன்படுத்தி, தன்னைப் பாதுகாத்ததும் அல்லாமல், படையினர்க்கும் தண்டனை விலக்கு அளிக்கும் சட்டவாக்கத்தையும் புதிய அரசியல் அமைப்பில் முன்னெடுத்து வருகின்றார். சிறீலங்காவின் இன்றைய அரச கொள்கையென்பது, இனப் படுகொலையாளர்களுக்குத் தண்டனை விலக்கை உறுதிப்படுத்துவது, தங்களை அனைத்துலகச் சட்டங்களில் இருந்து காப்பாற்றக் கூடிய அரசுகளை இலங்கையின் இறைமையைப் பகிர்ந்து இலங்கையைச் சுரண்ட அனுமதிப்பது, இத்தகைய தங்களை இனப் படுகொலையில் இருந்து காப்பாற்றக் கூடிய அரசுகளை இந்துமா கடலின் அமைதியைச் சீரழிக்கக் கூடிய வகையில் இலங்கையின் ஆதிபத்திய இந்துமா கடலில் நிலைகொள்ள அனுமதிப்பது என்னும் முக்கூட்டு அரசியற் கொள்கையாகக் கட்டமைக்கபட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வலுவான அரசாங்கத்தின் சீனாவின் கூட்டு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் உறுப்புரிமை நாடுகளோ உலக ஒழுங்கு முறைக்குள்  சிறீலங்காவைக் கொண்டு வருவதலை நடைமுறைச் சாத்தியமில்லாததாக்குகிறது. அவ்வாறே சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ அல்லது முஸ்லீம் மக்களோ இந்த வலுவான அரசாங்கத்தின் கொலைக்கு அஞ்சாத படைகளை எதிர்கொண்டு, சனநாயக வழிகளில் போராட முடியாது கொலைகாரப்படை அதிகாரிகளையே அரசாங்கத்தின் நிர்வாகத்திலும், சட்ட அமுலாக்க நீதித் துறையிலும், அதியுயர் பதவிகளில் இன்றைய அரசாங்கம் நியமித்து, ஆட்சி புரிந்து வருகிறது.

இந்தப் படையதிகாரிகள் தங்களால் இனப் படுகொலைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் உள்ளானவர்களின் நினைவேந்தல் சின்னங்களைச் சிதைத்து, அவர்களை நினைவு கூரும் மக்களின் அடிப்படை மனித உரிமையும் தொடர்ந்து வன்முறைப்படுத்தி அச்சப்படுத்துவதால், தங்களுக்கு எதிரான ஆதாரங்களைச் சாட்சியங்களை அழித்து வருவதை முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டதும், அங்கு நட்டு வழிபாடு செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட நடுகல் திருடப்பட்டதுமான இவ்வாரச் செயற்பாடுகள் மேலும் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளன.

இவ்வாறு தங்கள் சொந்த ஆட்சியாளர்கள் என உலகு நம்புபவர்களாலேயே கைவிடப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்கள், தங்கள் சமூக மூலதன – புத்திஜீவித்தனப் பகிர்வால் சக்தி அளித்து, அவர்களது வாழ்வைப் பலப்படுத்துவதாலேயே அவர்களுடைய மனதில் அமைதிக்கான பாதுகாப்பைக் கட்டியெழுப்பி, அவர்களைச் சிறீலங்காவின் நடைமுறை இனஅழிப்புப் போரிலிருந்து அவர்கள் விடுபட வைக்க முடியும். ஈழத்தமிழினத்தை உலகின் சந்தைப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் சமுதாயமாகவும், தங்கள் அறிவுப்பலத்தால் தங்களுக்கான அமைதியை உருவாக்க வல்ல சமுதாயமாகவும் மாற்றுதல் என்னும் செயற்திட்டத்தின் மூலமே அவர்களைக் குறித்த அக்கறையையும், ஆர்வத்தையும் உலகு கொள்ளச் செய்யலாம். அப்பொழுதுதான் ஈழத் தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உறுதியாகி உலக நாடுகளும் அமைப்புக்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகள் மீள உதவும் காலம் உருவாகும் என்பதே இலக்கின் இறுதியும் உறுதியுமான எண்ணம். இதற்காகப் புலம்பதிந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து உழைப்பது ஒன்றே முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலைக்கு உள்ளானவர்களுக்கான சிறந்த போற்றுதலாக அமையும்.