ஈரான் மீது நடவடிக்கை எடுக்காவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளை அச்சுறுத்தும் சவுதி

547 Views

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி இளவரசர் எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது கடந்த 14ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்படைந்ததோடு, விலையும் உயரும் என அஞ்சப்படுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஈரான் தரப்பில் ஏமனில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி வருகின்றது. இந்நிலையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்சினை விரிவடையும்.

கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயரக்கூடும். இதுவரை கண்டிராத மற்றும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அதோடு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என்றும் ஈரான் மீதான நடவடிக்கை அமைதி வழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply