ஈரான் குறித்து ட்ரம்ப் – நெதன்யாகு ஆலோசனை

ஈரான் குறித்தும் பிற பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தினர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானிலிருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானில் சமீபத்தில் எரிவாயு பொருட்கள் விலை உயர்வு குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றிற்கும் அதிகமான ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவுட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகின்றது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றது.