இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன்

642 Views

மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தீயணைப்புப் படை வீரருக்குரிய அங்கியை அணிந்திருந்த அவர், குளிரூட்டப்பட்ட அந்த அறையின் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னர் தனது மகளைக் கொஞ்சுவதற்காகக் குனிந்தார்.

pl 4 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்

“அவளுக்காக இறைவனை வேண்டுங்கள்” என்று அவரது தோளைத் தட்டியவாறு அவரது உடன் பணியாளர் ஒருவர் ஹசனுக்குக் கூறினார்.

அமீர் மற்றும் இஸ்லாம் அல்-அற்றாருடைய உடன் பிறப்புகளான லம்யாவும் ஏனைய பிள்ளைகளும் வெள்ளிக் கிழமை இரவு பெயிற் லாஹியா (Beit Lahia) என்ற இடத்தில் அமைந்திருந்த தங்கள் வீட்டில் இருந்த போது, அவர்கள் வீட்டின் மேல் இரவிரவாக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் காரணமாகக் கொல்லப்பட்டார்கள்.

பெயிற் ஹனூன் (Beit Hanoun) ஜபால்யா (Jabalya) போன்ற நகரங்களுடன் காஸா ஓடையிலுள்ள இன்னொரு நகரமாக இருக்கின்ற பெயிற் லாஹியா ஆகிய நகரங்கள் மீது இடைவிடாத விமானத் தாக்குதல்களையும் மிகச் செறிவான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களையும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டிருந்தன.  காஸா நகரத்தின் கிழக்குப் புறமாக அமைந்திருக்கின்ற சுஜாஈயா (Shuja’iah) மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

p8 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்
 

வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இத்தாக்குதலில், ஆறு விமானத் தளங்களிலிருந்து ஒரே நேரத்தில் கிளம்பிய 160 போர் விமானங்கள், 450 ஏவுகணைகள் மற்றும் எறிகணைகளைப் பயன்படுத்தி, 40 நிமிடங்களில் 150 இலக்குகளைக் குறி வைத்ததாக இஸ்ரேலின் இராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

காஸாவில் அமைந்திருக்கின்ற ஒரு நிலக்கீழ் சுரங்கத் தொகுதியைத் தாக்கியழிப்பதே இத்தாக்குதலின் நோக்கமாக இருந்தது என்று ஜொனதன் கொன்றிக்கஸ் (Jonathan Conricus) தெரிவித்தார்.

ஆனால், அப்பாவிப் பொது மக்களே இத்தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக பெயிற் லாஹியாவில் வதிகின்ற அபெட்றாப்போ அல்-அற்றார் (Abbedrabbo al-Attar) சுட்டிக்காட்டினார்.

pl 6 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்

லம்யாவும் ஏனைய பிள்ளைகளும் வசித்த எங்கள் பக்கத்து வீடு விமானத்தாக்குதல் மூலம் தாக்கியழிக்கப்பட்ட போது, நாங்கள் பயந்து, அலறிக்கொண்டு, எங்கள் வீட்டை விட்டு உடனே வெளியேறினோம் என்று ஆறு பிள்ளைகளின் தந்தையாகிய 40வயது அபெட்றாப்போ மேலும் தெரிவித்தார்.

நாங்கள் எல்லோருமே சாகப் போகின்றோம் என்று தான் நினைத்தோம். இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் போராளிகள் எவரும் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை. இடைவிடாது 50 விமானத் தாக்குதல்கள் இஸ்ரேலினால் அப்பிரதேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தனது குடும்பமும் தனது சகோதரனது குடும்பமும் 8 கிலோமீற்றர்கள் தூரம் கால்நடையாக நடந்து, காஸா நகரத்தில் உள்ள ஷீபா (Shifa)  மருத்துவமனைக்கு முன்னால் அமைந்திருக்கின்ற ஐ.நாவினால் நிர்வகிக்கப்படும் பாடசாலைக்கு வந்து சேர்ந்ததாக அல்-அற்றார் தெரிவித்தார்.

எமது பிள்ளைகள் எல்லோரும் வெறும் நிலத்திலே தான் படுத்தார்கள் என்றார் அவர். எமது உடைமைகள் எதையுமே நாங்கள் எம்முடன் எடுத்து வரவில்லை. எங்கள் வீடு இன்னும் இருக்கிறதா அல்லது தாக்கியழிக்கப்பட்டு விட்டதா என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.

pl 1 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்

காஸாவின் வடக்காக உள்ள நகரங்களில் வாழும் ஏராளமான குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்திருக்கின்றன. அப்ராஜ் அல்-நாடாவில் (Abraj al-Nada) அமைந்துள்ள பொதுமக்கள் வதியும் கட்டடத்தின் மீது மிகக் கடுமையாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததன் காரணத்தால் எமது வீடுகளை விட்டு எம்மால் வெளியேற முடியவில்லை. இதன் காரணத்தினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாங்கள் கோரினோம்.

எனது வாழ்க்கைக் காலத்தில் நான் சந்தித்த மிகவும் மோசமான சண்டை இது. எனது வாழ்க்கையில் பல யுத்தங்களை நான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் மூர்க்கத்தனமானதாகும்.

தரைவழி நகர்வுக்குத் தயாராகும் இஸ்ரேல் இராணுவம்

காஸா சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, 39 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 119 பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஆகக்குறைந்தது 830 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

காஸா ஓடையிலிருந்து இதுவரை 1050 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எட்டு இஸ்ரேலியர்களும் ஒரு இந்தியரும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்று முப்பதுக்கு (130) மேற்பட்டோர் காயப்பட்டிருக்கிறார்கள்.

p7 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்

இஸ்ரேல் தேசத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு (Benjamin Netanyahu) சூளுரைத்திருக்கிறார்.

பல இஸ்ரேல் தாங்கிகள் காஸா ஓடையை நோக்கி வியாழக்கிழமை முன்னகர்த்தப்பட்டு, இஸ்ரேல் பாதுகாப்பு வேலியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்று அல்ஜசீராவைச் சேர்ந்த எலியாஸ் காராம் (Elias Karram) தெரிவித்தார்.

தேவையேற்படும் போது பணியாற்றும் 16,000 இஸ்ரேல் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினருக்கான விடுமுறைகள் அனைத்தும் தடை  செய்யப்பட்டிருப்பதாகவும் காராம் மேலும் தெரிவித்தார்.

காஸா ஓடையில் அமைந்திருக்கின்ற நகரங்கள் மீது அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்கள் காரணமாக அங்கு வதிகின்ற பலர், சமூக வலைத் தளங்களில் தங்கள் பிரியாவிடைச் செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். காஸா மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அந்நகரங்கள் அனைத்திலும் மின் சக்தி முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.

சுஜாஈயா வாசியான தீயா வாடி(Diaa Wadi)  ட்வீற்றரில் பின்வரும் நேரடிப் பதிவை மேற்கொண்டிருந்தார்.

உலகைச் சேர்ந்தவர்களே!  இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்டிலறி எறிகணைகள் மற்றும் போர்விமானங்களின் தாக்குதல்களுக்கு நான் தற்போது இலக்காகி இருக்கிறேன்.

ஒரே அறையின் வெவ்வேறு மூலைகளில் நாங்கள் தற்போது வெவ்வேறாகப் பிரிந்து இருக்கிறோம். எமது சில ஆவணங்களையும், சில உடைமைகளையும் உள்ளடக்கிய ஒரு பையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்தபடி என்னசெய்வதென்று தெரியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறோம். எனது முழு வாழ்க்கையிலுமே நான் இதற்கு முன்னர் அனுபவித்திருக்காத மிகக் கடினமானதும், மிகப்பாரமானதுமான உணர்வுகள் நிறைந்த நேரமாகவும் இது இருக்கிறது.

இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு, தாக்குதல்கள் தணிந்த போது, விடியற்காலையைப் பார்க்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

முற்று முழுதாகப் பைத்தியக்காரத்தனமான தாக்குதல்

பேயிற் ஹனூன் என்ற இடத்தில் மக்கள் வாழ்விடமாக இருந்த ஒரு பகுதி முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. முப்பது வீடுகள் வரை அங்கு தாக்கி அழிக்கப்பட்டதாக அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனரான மொஹமட் அல் ஸோனி (Mohammed al-Zoni) தெரிவித்தார். எமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான  மகிழுந்துகள், வண்டில்கள், வயல்கள் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டன.

தாக்குதல்கள் தொடங்கிய மறுகணமே குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிய காரணத்தால் இறைவன் அருளால் யாருமே அங்கு கொல்லப்படவில்லை என்று மொஹமட் அல்-ஸோனி மேலும் கூறினார்.

எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி தாக்குதல்கள் தொடங்கப்பட்டபோது நாங்கள் எங்கள் வீட்டிலே தான் இருந்தோம் என்றார் அவர். அதிர்ச்சியினால் எமது யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கி எங்கள் மேல் விழுந்துகொண்டிருந்தன. இப்போதைக்கு எனது குடும்பம் இன்னொரு பிரதேசத்தில் தங்கியிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் அரசு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் இங்கே தான் இருப்போம்.

தமது முழு வாழ்க்கைக் காலத்திலுமே தாங்கள் சந்தித்த மிக மோசமான இரவு என்று அவர்கள் விபரிக்கின்ற தாக்குதல்களிலிருந்து அங்குள்ள மக்கள் ஒரு புறம் மீண்டு கொண்டிருக்கும் அதே வேளை, மறுபுறம் மற்றவர்கள் தமது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

pa2 இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் - தமிழில் ஜெயந்திரன்

வடகாஸாவில் அமைந்திருக்கின்ற ஷேக் ஸாயிட் (Sheikh Zayed) பிரதேசத்தின் மேல் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ராவாற் தனானியும் (Rafat Tanani) அவரது குடும்பம் முழுவதுமே கொல்லப்பட்டிருந்தார்கள். அவர், 36 வயது நிரம்பிய அவரது கர்ப்பிணி மனைவி, ராவ்யா (Rawya) எட்டு வயதுக்குக் குறைந்த அவர்களது பிள்ளைகளான இஸ்மாயில் (Ismail),  ஆதாம் (Adham) அமீர் (Amir), மொஹமட் (Mohammed)ஆகிய அனைவருமே கொல்லப்பட்டு இடிபாடுகளுக்குள் புதைந்துபோயிருந்தார்கள்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கட்டட இடிபாடிகளுக்கு நடுவில் இருந்து மீட்டெடுப்பதற்கு மீட்புக்குழுவினருக்கு ஒரு முழுநாள் தேவைப்பட்டது.

அப்பாவிப் பொதுமக்களின் வீடுகளை இலக்கு வைத்து, சிறுவர்களைக் கொன்று, மக்களை அவர்கள் இல்லிடங்களிலிருந்து இடம்பெயர வைக்கும் இச்செயற்பாடு, மிகவும் பைத்தியக்காரத்தனமானது என்று றபாட்டின் ஒன்று விட்ட சகோதரர் ஜமீல் (Jameel) அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். இரண்டாயிரத்துப் பதின்நான்காம் (2014) ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உடன் ஒப்பிடும் போது இது மிக மிக மோசமானதாகும்.

நன்றி: அல்ஜசீரா

Leave a Reply