இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை

இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் நாள் ஜெனீவாவில் கூடவுள்ள 54 ஆவது மனித உரிமைகள் சபையின் சமர்ப்பிக்கவுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசு இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும்உண்மைகளை கண்டறிதல் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாகாணசபைகளை வலுப்படுத்தி 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாணசபைகள் இயங்கவில்லை.

உழல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் காணி அதிகார மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்புச்சட்ட மறுசீரமைப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை தொடாபில் இலங்கை அரசு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது 51/1 ஆவது தீர்மானத்திற்கு பின்னரான கடந்த கால நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகும். நீதி நிலைநாட்டப்படுவதில் இலங்கை எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை அதுவே அங்கு மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கு தடையாக உள்ளது. இலங்கையில் நீதி நிலைநாட்டுவதில் பாரிய குறைபாடுகள் உள்ளன. அரசும், அரசியல் கட்சிகளும் அதனை நிலைநாட்டுவதற்கு தீவிரமாக செயற்பட வேண்டும்.

போர் குற்றங்கள், துன்புறுத்தல்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மக்கள் கூட்டங்களை கட்டுப்படுத்துவதில் வன்முறைகளை பயன்படுத்துதல் என இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அதிகம். கறுப்பு யூலை வன்முறைகளில் பல நுறுபேர் இறந்திருந்தனர். அதுவே அங்கு ஆனமோதலை அதிகரித்திருந்தது. கடந்த யூலை அதன் 40 ஆவது நினைவு மாதம்.

இலங்கை அதிபர் தமிழர் தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துவது வரவேற்றக்கத்தது. அவர் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அரசியல் அதிகார பலவலாக்கம் தொடர்பில் பேசுகிறார். ஆனால் அதற்கு முன்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும். அது தான் அதிகாரபரவலை வலுவாக்கும். நீதிவழங்கல் பொறிமுறை அனைத்துலக தரத்திற்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

இலங்கை அரசின் விசாரணைகளுக்கு அனைத்துலக சமூகம் தனது உதவிகளை வழங்கும். விசாரணைக்கு உதவுதல், தண்டனைகளை பெற்றுக்கொடுத்தல், குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை கொண்டுவருதல் போன்ற விடையங்களில் அனைத்துலக சமூகம் காத்திரமான பங்கு வகிக்கும்.

இலங்கை அரசு மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களை பாதிக்காதவாறு பொருளாதார சிக்கல்களை தீர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சுயாதீனமாக சாட்சியளிப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். மக்களை சந்திப்பது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில் அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். சுயாதீனமாகவும், அனைத்துலக தரத்திற்கும் அமைவாக இருத்தல் வேண்டும்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகள் பலப்படுத்த வேண்டும். இராணுவ பிரசன்னம் குறைக்கப்படுவதுடன், பாதுகாப்பு செலவீனமும் குறைக்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படைத்துறை பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இலங்கை அரசு தொடர்புகளை பேணவேண்டும். தீர்மானம் 51ஃ1 பிரகாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்க ஐ.நாவுக்கு அனுமதி வழக்கப்படவேண்டும்.

பல்லின மற்றும் பல மதங்களை கொண்ட சமூகங்களுடன் பணியாற்றும்போது தொல்லியல் திணைக்களம், வன பாதுகாப்பு பிரிவு, நீர்ப்பாசண பிரிவு போன்ற திணைக்களங்கள் இனப்பாகுபாடு மற்றும் நேர்மையற்ற முறையில் செயற்படுவது மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும். இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினை இலங்கை அரசு அழைக்க வேண்டும்.

இலங்கை அரசு நீதியை நிலைநாட்டுவதற்கும், அனைத்துலக விதிகளின் அடிப்படையில் அனைத்துலக மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேவையேற்பட்டால் தடைகளை கொண்டுவரவும், குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஐ.நா அமைப்புக்கள், அனைத்துலக நிதி அமைப்புக்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்கும்போது இலங்கையின் மனி உரிமை செயற்பாடுகள் மற்றும் ஆட்சி முறைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஐஃநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு அறிக்கையை வாசிக்க இங்கு அழுத்தவும்.

A_HRC_54_20_AdvanceUneditedVersion