அதேவேளை, சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் விரும்புகின்றனர். ஆனால் வெளிப்படையாகக் கருத்துக்கூற மறுக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பழம் பெரும் கட்சியை உடைத்து அம்பாந்தோட்டையைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பத்தினரால் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி உருவாக்கப்பட்டு அந்தக் கட்சியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுகிறார்.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் ஆத்திரமடைந்துள்ளனர். குறிப்பாக கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் எஸ்டபிள்யுஆர்டி. பண்டாரநாயக்காவின் மகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைக்கு சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டுமென்றே பிராத்திக்கிறார் போலும்.
ஏனெனில் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளப் புதுப்பிக்கலாம் எனவும் மகிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து அவருடன் சேர்ந்திருக்கும் ஏனைய உறுப்பினர்களை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கலாமென்றும் சந்திரிகா கருதுகிறார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் சந்திரிகாவின் நிலைப்பாட்டோடு இருப்பதால், அனேகமாக சஜித் பிரேமதமாச வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை மைத்திரிபால சிறிசேன ஏற்கக் கூடுமெனவும்.
யாருக்கு ஆதரவளிப்பதென்ற முடிவு எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, சஜித் பிரேமதாசவை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகாவை தங்கள் பக்கம் எடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஈடுபட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க சரத் பொன்சேகா முன்வர வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசர பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். அதேபோன்று ஏனயை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற மகேஸ் சேனநாயக்கா தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவே இவர் களமிறக்கப்பட்டுள்ளார் என்ற கருத்துக்களும் இல்லாமில்லை.
தேர்தலில் போட்டியிட இதுவரை 13 பேர் இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளனர். ஆகவே இம்முறை அதிகளவானோர் தேர்தலில் போட்டியிடக் கூடுமென தேர்தல்கள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான கட்சி வேட்பாளர்களை விழுத்தும் நோக்குடனேயே இத்தனை வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர் என்பது கண்கூடு.
குறிப்பாக அழிவு நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்க வேண்டுமென சந்திரிகாவும், சஜித் பிரேமதாசவை தோல்வியடைச் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவும் முற்படுகின்றனர்.
இதன் பின்னணியிலேயே அதிகளவு வேட்பாளர்கள் மறைமுகமாக வெவ்வேறு அமைப்புகளின் பெயர்களில் களமிறக்கப்பட்டு செயற்கையான அரசியல் நெருக்கடி நிலைமை ஒன்றைத் தோற்றுவிக்க முற்படுகின்றனர். எந்தக் கட்சி, எந்த வேட்பாளர் பௌத்த சிங்கள மக்களின் நன்மதிப்பை பெறுவது என்பதே இங்கு பிரதான பிரச்சினை. தவிர வேறெந்தப் பிரச்சினைகள் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்கள் அக்கறைப்படுவதாக இல்லை.
இந்தப் பின்புலத்தை அறிந்துகொண்டுதான் அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை தொடர்பான தமது அணுகுமுறைகளைக் கையாளுகின்றனர். ஈழத் தமிழர் அரசியல் விடுதலை பற்றிய விவகாரத்தையும் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்போடு சேர்த்து நோக்குகின்றன.
தமது பூகோள அரசியல், பொருளாதார நலன்களுக்குச் சாதகமான முறையில் இந்த நாடுகள், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏதோவொரு வழியில் யாரோ ஒரு வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு ஒத்துழைப்புச் செய்கின்றமையும் வெளிப்படையாகவே தெரிகிறது.
இவ்வாறானதொரு நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது வடக்குக்- கிழக்குத் தாயக மக்களுக்குக் கடுமையான அதிருப்தியும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்முறை வாக்களிக்காமல் தவிர்க்கலாம் அல்லது வாக்களித்து அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதென்றும் கூற முடியும்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் பயனற்றது என்று தெரிந்தும், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு விரும்பியோ விரும்பாமலோ ஈழத் தமிழர்களில் அதிகமானவர்கள் வாக்களித்தனர்.
ஆனால் எதுவுமே நடக்காத ஒரு சூழலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையீனங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள கட்சிகள் தமக்குள் மோதுப்பட்டுப் பிளவுபடும் அரசியல் பிரச்சினைகளே ஊடங்களில் முக்கியம் பெறுவதும் ஈழத் தமிழ் மக்களுக்கு வெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
எனவே கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி ஜனநாயக முறையில் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வேலைத் திட்டங்களை சிவில் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்கள், முரண்பாடுகள் போன்றவற்றுக்கு காரணம் என்ன என்பதை தெரிந்தும் தெரியாதவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் பூகோள அரசியல் தாக்கத்துக்கு இலங்கைத்தீவு உட்படவில்லை என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல. ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் இந்த நிலைமை புரியும்.