இலங்கை – இந்தியா இடையில் வெகு விரைவில் கப்பல் சேவை

கடல் மார்க்கமான பயணிகள் போக்குவரத்து குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய-இலங்கை கூட்டுக் குழுவின் மெய்நிகர் சந்திப்பு 2023 ஜூலை 14ஆம் திகதி நடைபெற்றது.

இந்திய அரசாங்கத்தின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சின் மேலதிக செயலாளர் ஶ்ரீ ராஜேஷ் குமார் சின்ஹா, இலங்கை அரசின் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவச்சந்திர ஆகியோரின் தலைமையில் இந்த இருதரப்பு சந்திப்பு நடைபெற்றிருந்தது.

பரஸ்பரம் இணக்கப்பாட்டுடன் அடையாளங்காணப்பட்ட இடங்களிலிருந்து கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெற்றிருந்தன. கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பதால் பிராந்திய ரீதியான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த சேவைகள் மேம்படுத்தப்படுவதுடன் மக்கள் – மக்கள் தொடர்புகளும் வலுவடையுமென இருதரப்பினரும் இணங்கியுள்ளனர்.

வெகுவிரைவில் கப்பல் சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கான பரஸ்பர ஒத்துழைப்புக்கான பல்வேறு காரணிகளையும் இந்தகூட்டுக்குழு அடையாளம்கண்டுள்ள அதேவேளை பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.

2011 இல் கைச்சாத்திடப்பட்ட கடல் மார்க்கமான பயணிகள் போக்குவரத்து குறித்த இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய இலங்கை அரசாங்கங்களால் இந்த கூட்டுக்குழு அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது.