இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஹெலினா டல்லி

இலங்கை அரசு 2017 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதே தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்திற்கான முதன்மையான காரணம் என சமத்துவத்திற்கான  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஹெலினா டல்லி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மீது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (10) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்பு ச்சட்டத்தை நீக்குவது, அல்லது அதில் அனைத்துலக தராதரத்திற்கு இணையாக திருத்தம் மேற்கொள்ளவது என்ற உறுதிமொழிகளின் அடிப்படையில் தான் 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டது. ஆனால் சிறீலங்கா அரசு அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்களை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளது. பொதுச் சமூகத்தின் பணிகள் அங்கு பின் தள்ளப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவது தொடர்பில் 705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 40 உறுப்பினர்கள் அதில் பங்கெடுக்கவில்லை.

சிறீலங்காவுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை இந்த வருடத்துடன் நிறைவடைவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply