இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் சுரேந்திரன் வலியுறுத்தல்

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ்  மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த  உப நிகழ்வில்  கலந்துகொண்டிருந்தனர்.

 இந்நிகழ்வில் சுரேந்திரன் மேலும் கூறுகையில், பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுக்கப்படுகின்றது என  தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை  எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக  தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.