இலங்கையை அழகுபடுத்தச் சென்ற மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய பௌத்த பிக்கு!

வண்ணமயமான ஓவியங்களை வரையச் சென்ற மாணவனின் இறப்பிற்கு காரணமான பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை வண்ணமயமாக்குவோம் என்னும் மகிழ்வோடு ஓவியம் வரையச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிவிதிகல பிரதேசத்தில் இடம்பெற்றது.

சமூக வலைத்தளங்களினூடாக தன்னார்வமாக ஒன்றிணைந்த இளைஞர்கள், இலங்கையின் பல பகுதிகளிலும் அசுத்தமாக இருக்கும் சுவர்களையும், சுவரொட்டிகளையும் அகற்றிவிட்டு அந்த இடங்களில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர்.

இதுபோன்று நிவிதிகல பிரதேசத்திலும் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவன் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது, அதி சொகுசு ரக கார் ஒன்று மோதியதில் அந்த மாணவன் பரிதாபமாக பலியானதாக நிவிதிகல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கடந்த 13ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் 19 வயதுடைய எச்.ஆர். தனுக லக்ஷான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விபத்தில் பிக்கு ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில்,

ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது வாகனத்தை செலுத்திய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்குவை இரத்தினபுரி நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர் செய்ததை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உரும்வல குசல என்ற பௌத்த பிக்கு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு வாகனத்தை செலுத்தும்போது ஒருவித போதை பொருளை உட்கொண்டிருந்தார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துளளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த விபத்தில் 19வயது பாடசாலை மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
dssss இலங்கையை அழகுபடுத்தச் சென்ற மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய பௌத்த பிக்கு!