இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

807
1,143 Views

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் எதிர்வு கூறியுள்ளது.

உலகத்தின் பலசாலிகளாகக் கூறப்படும் நாடுகளும், நபர்களும் COVID-19 தொற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் COVID-19 நோயினை எளிமையாக எடைபோட்டுவிடக் கூடாது.

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு COVID-19 தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் மீண்டும் COVID-19 பரவக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான போதியளவு விளக்கங்கள் ஏற்கனவே மக்களிடையே வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றாமை கொரோனா வைரஸ் பாரிய அளவில் பரவுவதற்கான காரணமாகும். அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாமையும் இன்னொரு காரணமாக அமைந்துள்ளது. உதாரணமாக திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் (Brandix) இருந்து ஏற்பட்ட தொற்றை கூறலாம்.

இம்முறை இரு நாட்களிலும் 1000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் இந்நோய் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாக காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்த மற்றும் வெளிமாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர்களில் தான் இந்த தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வடக்கு மாகாணத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதுடன், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் அறிவுறுத்தலிற்கமைய மேற்பார்வைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் முன்னேற்பாடாக வடக்கு மாகாணத்தில் 5000 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண தொற்றாளருடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால் அவர்களுக்கு PCR பரிசோதனை செய்வதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் 2ஆவது அலையினை கட்டுப்படுத்துவது தொடர்பான COVID-19 Exit Strategy ஆவணம் ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தாலே கொரோனா வைரஸை சரியான முறையில் கட்டுப்படுத்தலாம்.

அரசாங்கத்திற்குரிய அறிவுறுத்தல்கள் 2020.10.05 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 10 அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளோம். அதாவது;

  1. COVID-19 நோயாளர்களை சரியாக இனங்காணும் பொறிமுறையை வலுவாக்குதல். இதற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறிமுறையையும் புலன்விசாரணைத் துறையினையும் இணைத்து குழுவாகப் பணியாற்றுதல் (Contact Tracing).
  2. இயன்ற உச்சபட்ச கொள்ளளவில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளல்; மற்றும் அக் கொள்ளளவினை விரைவில் விரிவாக்குவதற்குத் தேவையான சகல வசதிகளையும் உறுதிப்படுத்தல்.
  3. நோயாளர்களையும் தொடர்பாளர்களையும் தேடியறிந்து PCR பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் சந்தேகத்திற்குரிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்தி மீண்டும் மீண்டும் பரிசோதிப்பதன் மூலம் PCR பரிசோதனையின் உணர்திறனை அதிகரித்துக்கொள்ளல் (Aggressive Testing Strategy மற்றும் Test! Test! Test! Test! Strategy)
  4. நோயாளர்கள் அறியப்பட்ட பிரதேசங்களை (சிவப்பு வலயம்) தனிமைப்படுத்துவதன் மூலம் நோயாளர்கள் அறியப்படாத பிரதேசங்களுக்குள் (பச்சை வலயம்) வைரஸ் புகுவதைத் தடுத்தல். (Zonal Lockdown).
  5. விஞ்ஞான முறைமைக்கு அமைய முழு நாடும் உட்படும் விதத்தில் எழுந்தமானமாக சமூகக் குழுமங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் நோயின் உண்மையான பரவல் நிலை தொடர்பான சரியான நிலையை அனுமானித்தல் (RandomCommnity Sample Surveillance).
  6. கடற்படை முகாம் மற்றும் கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தினை ஒட்டிய COVID-19 நோயாளர்களில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமானது, அபாயகரமான நிலையங்களோ குழுமங்களோ ஒன்றுகூட்டப்படும்போது, சிறு குழுமங்களாகப் பிரிக்கப்படுவதன் மூலம் ஒரே தடவையில் பெரிய குழுவொன்றுக்கு நோய் பரவாமல் தடுத்துக் கொள்ளலாம் என்பதாகும். (Compartmentalization).
  7. DReAM கொள்கைக்கு அமைவாக பொதுமக்கள் அடிப்படைச் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றல் கட்டாயமானது.

D – Distancing/ சமூக இடைவெளி

Re – Respiratory Etiquette/ சுவாச ஒழுங்குமுறை

A – Aseptic technique / தொற்றின்றிய நுட்பம் (கிருமிநீக்கமும் கை கழுவுதலும்)

M – Mask/ முகக் கவசப் பாவனை

  1. சுகாதார அமைச்சினது COVID-19 தொழிநுட்பக் குழுவானது வாராந்தம் அல்லது தேவைப்படின் நாளாந்தம் கூடி தொழினுட்ப தீர்மானங்களை தாமதமின்றி மேற்கொள்ளல்.
  2. சுகாதார வீரர்கள் என அறியப்பட்ட சுகாதாரத் துறையினர் மனவுறுதியுடன் கடமையாற்றுவதற்காக வழங்கப்பட்ட வசதிகளையும் ஊக்குவிப்புகளையும் தடையின்றி வழங்கலை உறுதிசெய்தல்.
  3. சுகாதாரத் துறையினர், முப்படையினர், விமான மற்றும் பயணிகள் போக்குவரத்துத் துறையினர் போன்ற சேவை வழங்கும் துறைகள் உட்பட அதி அபாயக் குழுமங்களை அடிக்கடி PCR பரிசோதனைக்கு உட்படுத்தல். ஏன்பனவாகும்.

சமூக தொற்றாக மாறினால் பொரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது எந்தெந்த பகுதிகளில், எப்பகுதியினரை தாக்கும் என குறிப்பாக எதிர்வு கூறுவது கடினமானது. அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

வைத்தியகலாநிதி T. காண்டீபன்,

வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here