இம்ரான் கானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

357 Views

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து வழங்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதையடுத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கில்கிட்-பால்டிஸ்தான் மக்களின் நீண்ட கால கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். இந்த பிராந்தியத்துக்கு சிறப்பு மாகாண அந்தஸ்தை வழங்குகிறேன். இதனுடன் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பொருளாதார தொகுப்புதவி நிதியும் வழங்க பரிசீலித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை தனது ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறும் இந்திய வெளியுறவுத்துறை, “சட்டவிரோதமாக அங்கு மேற்கொள்ளப்படும் மாற்றம் எதையும் இந்தியா நிராகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “1947ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம், ஜம்மு காஷ்மீரின் சட்டப்பூர்வமான ஒருங்கிணைந்த பகுதி” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் இந்திய பிராந்தியங்களின் அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக, அந்த பகுதிகளில் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக பாகிஸ்தான் வெளியேற வேண்டும். பிராந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் எல்லை மீறக்கூடாது” என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply