இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

535 Views

இரண்டு இலட்சம் (200,000) ஆண்டுகளாக மனிதர்கள் சிறிய உறவினர் குழுக்களாகவே தமது கலாச்சராங்களையும் மொழியையும் பேணி வாழ்ந்தார்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் அறிவு இப்போக்கை மாற்றி பெரிய இராச்சியங்களை அமைக்க வழிவகுத்தது.

பெரிய இராச்சியங்களின் வளர்ச்சியின் போது சிறிய உறவினர் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் பெரிய குழுக்களில் கரைந்த போது சிறிய குழுக்களின் தனித்துவமான அடையாளங்களும் மொழிகளும் தொலைந்து போனது. ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாபெரும் பேரரசுகள் தோன்றின.

ஏற்கனவே வளர்ச்சி அடைந்திருந்த கலாச்சாரங்களும் மொழிகளும் இப்பேரரசுகளின் காலத்தில் தொலைந்து போகவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேரரசுகள் விரிவான போது அதனுள் அகப்பட்ட மக்கள் தங்கள் அடையாளங்களையும் மொழியையும் பாதுகாக்க பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். இன்றும் நடத்துகிறார்கள்.

அண்மைக்காலத்தில் அறியப்பட்ட பேரசுகளாக ஒட்டமான் பேரரசு, சோழப் பேரரசு மற்றும் போத்துகேய, இஸ்பானிய, ஒல்லாந்த, பெல்ஜிய, பிரெஞ்சு, பிரித்தானிய பேரரசுகள் விளங்குகின்றன. தற்காலத்தில் சிலர் ஐ-அமெரிக்காவை பேரரசு என்று சரியாகவே குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இன்று நாடுகளாக அறியப்பட்ட அதிகமான நாடுகளை பேரரசுகளாக பார்ப்பதே சரியான பார்வையாக இருக்கும்.

இன்று நாடுகளாக அறியப்பட்ட இப்பேரரசுகள் தங்கள் இராணுவ பலத்தாலேயே தங்களை தக்க வைத்துக்கொள்கின்றன. இப்பேரரசுகளின் உள்ளே அகப்பட்டுள்ள, நாடுகளாக அங்கீகரிக்கப்படாத, தேசங்கள் தங்களுக்கென ஒரு இராணுவத்தை கட்டியெழுப்பும் போது அதை சட்ட மீறலாக கணித்து பேரசுகள் எல்லாம் இணைந்து அவற்றை அழிக்கின்றன.Prabhakaran inspecting his troops இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

தமிழீழ இராணுவத்திற்கும் அதுதான் நடந்தது. பேரரசுகள் இவ்வாறுதான் அழிக்கும் என்று தெரிந்தும் இப்பேரரசுகளின் உள்ளே அகப்பட்டுள்ள தேசங்களின் மக்கள் தொடந்து சுயநிர்ணய உரிமைக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைய பிற்காலனிய-நவகலனிய உலகில் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரங்களுக்கு மீள் உயிர் கொடுக்கும் பல முயற்சிகள் தேசிய போராட்டங்களாக தொடர்கின்றன. இவற்றில் சில போராட்டங்கள், “இன்றைய பேரரசுகளின்” கூட்டு எதிர்ப்புக்கு மத்தியிலும் வெற்றி பெற்றுள்ளன.

சோவித் குடியரசு உடைந்த போது 15 புதிய நாடுகள் உருவாகின (1990). யூகோசுலாவியா உடைந்த போது 8 புதிய நாடுகள் உருவாகின (1992). இப்புதிய நாடுகளின் தோற்றம் நீதியானதே என்றாலும், அவை ஐ-அமெரிக்கா-சோவியத்குடியரசு இரண்டுக்கும் இடையிலானா போட்டிகளின் விளைவால் தோன்றியவை. இக்காரணத்தால், பல ஆண்டுகளாக போராடும் தேசியங்கள் பற்றிய இந்த ஆக்கத்தில் இந்நாடுகளின தோற்றம் உதாரணங்களாக கொள்ள முடியாது.

இவற்றை தவிர இன்னும் 4 தேசியங்கள் புதிய நாடுகளாக அண்மைக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பங்களாதேஷ் (1971), எரித்திரியா (1993), கிழக்கு தீமோர் (2002) மற்றும் தெற்கு சுடான் (2011) ஆகிய நாடுகளே இவை. இவற்றை விட இன்றும் மையநீரோட்ட ஊடகங்களில் இடம் பிடிக்கும் தொடர் தேசிய போராட்டங்களாக இருப்பவை, பாலஸ்தீனம், குர்திஸ்தான், கட்டலோனியா, காஷ்மீர், போகெயின்விலா, மேற்கு பப்புவா, திபெத், கரென், ரோஹிங்யா, நாகாலாந்து, கலிஸ்தான், தமிழீழம் போன்றவை. இவையும் இன்னும் பல தேசியங்களும் தற்கால பேரரசுகளினுள் அகப்பட்டு போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.479 இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

வெற்றிபெற்ற நான்கு தேசியங்களான பங்களாதேஷ், எரித்திரியா, கிழக்கு தீமோர், தெற்கு சுடான் ஆகிய நான்கு புதிய நாடுகளின் தோற்றங்களிலும் பேரரசுகளின் சுயநலன்கள் முதன்மை காரணங்களாக இருந்தன. இந்திய இராணுவம் தலையிட்டு பாகிஸ்தான் இராணுவத்தை வெயேற்றியே பங்களாதேஷ் உருவானது.

எரித்திரியாவின் தேசிய போராட்டமும் பல தசாப்தங்களாக இருவல்லரசுகளின் போட்டியாகவே தொடர்ந்தது. எத்தியோப்பியாவுக்கு சோவியத் குடியரசு உதவிகள் வழங்கியதால், எரித்திரியாவுக்கு ஐ-அமெரிக்கா இராணுவ உதவிகள் வழங்கியது. சோவியத் குடியரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்த போட்டி தளர்வடைய எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் இணங்கியே எரித்திரியா உருவானது. பின்னரும் இருநாடுகளும் போரிட்டன என்பது வேறு கதை. எரித்திரியா கட்டாய இராணுவ சேவை அமுல்படுத்தி இதனூடாக நாட்டுக்கு தேவையான சமூக சேவைகளை வழங்குவது தற்கால நவதாராளவாத பொருளாதாரத்திற்கு எதிரானதால் எரித்திரியா மேற்குலகத்தால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது.Eritrean freedom fighters இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

கிழக்கு தீமோரில் ஐநாவால் நடத்தப்பட்ட “தனிநாடா அல்லது இந்தோனேசியாவின் அங்கமா” என்ற கருத்துக்கணிப்பிலேயே கிழக்கு தீமோர் நாடு உருவானது. இதற்கு முன்னர் மேற்குலக ஆசியுடன் இந்தோனேசியா கிழக்கு தீமோரில் இனவழிப்பு செய்துகொண்டிருந்தது.  கிழக்கு தீமோரின் கரையோரப்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை அவுஸ்திரேலியா கையகப்படுத்துவதே ஐநா கருத்துக்கணிப்பு நடப்பதற்கு உந்துசக்தியாக இருந்தது.

தெற்கு சுடான் நாடு உருவாக்கம் இவை எல்லாவற்றையும் விட சிக்கலானது. வடக்கு சுடான் வடக்கிலிருந்து வந்த எதிப்தியர்களால் அதிக தாக்கத்திற்கு உள்ளானது. தெற்கு சுடான் ஆபிரிக்க மக்கள் நிறைந்தது. இரண்டையும் ஒரு நாடாக மாற்றியது காலனிய பிரித்தானியா. தெற்கு சுடான் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. ஐ-அமெரிக்கா வடக்கு சுடானனால் ஆளப்பட்ட சுடானுக்கு ஆயுத உதவிகள் கொடுத்தது. 2005 போர்நிறுத்த ஒப்பந்தத்தில், ஆறு வருட ஆட்சியின் பின் தனிநாட்டுக்கான கருத்துகணிப்பு என்று தீர்மானிக்கப்பட்டது. ஆறு வருடங்களின் பின், 2011 கருத்துக்கணிப்பின் பின் தனிநாடு உருவானது.

அண்மைக்காலங்களில் தேசிய உரிமைக்காக போராடி வெற்றிபெற்ற  மற்றும் இன்றும் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் வரலாற்றை தெரிந்து கொள்வது தேசியத்திற்காக போராடும் மக்களாகிய எமக்கு அவசியம். தெரிந்த பின்னர் அவர்களுக்கு எமது ஆதரவை கொடுப்பதும் அவசியம். அதலால் தொடந்து இதைப்பற்றி பேசுவோம்.

தொடர்ந்து பேசுவோம் ……..

Leave a Reply