இனவழிப்பு இயக்கவேண்டும் ஈழத்தமிழர்களை- பேராசிரியர் முனைவர் ஆ. குழந்தை

52 Views

தமிழீழ மண்ணிற்காக தங்களது இன்னுயிரை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களுக்கு எனது செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன். மே 18 நாள் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகும். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத பௌத்த அரசும் அதன் இராணுவமும், காவல்துறையும் ஈழத்தமிழர்களை கொன்றொழித்தன. இதற்கு ஆதாயவெறி பிடித்த உலக நாடுகள் பேரினவாத அரசுக்கு உதவிசெய்தன. இந்த இனப்படுகொலை நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்தன.

திட்டமிட்டு படுகொலை செய்த இனவாத அரசுக்கு தண்டனை இல்லை. படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நயன்(நீதி) கிடைக்கவில்லை. ஆனால் ஈழம் பௌத்தமயமாக்கப்படுகிறது. பௌத்தமயமாக்கலும் இனப்படுகொலையும் ஒன்றுதான். தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பது இனப்படுகொலையாகும்.

கச்சத்தீவில் புத்தர் சிலையும், நெடுந்தீவில் புத்தர் சிலையும், தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலமான வெடுக்குநாறியில் புத்தர் சிலையும், திரிகோணமலையில், மன்னாரில், யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலையும் இராணுவத்தால் நடப்படுகின்றன. அதுபோல ஈழம் என்ற தமிழர்களின் தாயகத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துதல் இராணுவத்தாலும் காவல்துறையாலும் நடத்தப்படுகின்றன. பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் தமிழர்களின் பண்பாட்டை அழித்து, சிங்கள பண்பாட்டை திணிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதுதான் பண்பாட்டு இனவழிப்பு எனப்படும்.

இந்தப் பண்பாட்டு இனவழிப்புக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் அமைத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர். சில அரசியல் கட்சி தலைவர்கள் உண்மையாகவே போராடி வருகின்றனர். ஆனால் சிலர் பேரினவாத அரசுக்கு கைகூலிகளாக பணியாற்றி தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கின்றனர். சிலர் விளம்பரத்துக்காக போராடுவதைப்போல நாடகம் ஆடுகின்றனர். சிலர் பேசிப்பேசி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கின்றனர். சிலர் பிறர்மீது சேறு பூசிக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சிலர் தமிழின விடுதலைப் போராட்டத்தை மறந்து, ஆடம்பர அலங்கார வாழ்க்கையை வாழ உழைக்கின்றனர். சிதறிக்கிடக்கும் தமிழர்கள் சீராக்கும் பணியை செய்யாமல் சீரழிக்கும் பணியை செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இனப்படுகொலை பாதிக்கப்பட்ட மக்களை இயக்கமாக கட்டமைத்து நயன்மைக்காக போராட இயக்கவேண்டும்.

தமிழ்நாட்டு சட்டமன்றமும், கனடா பாராளுமன்றமும், கத்தலோனியா பாராளுமன்றமும், ஒந்தாரியோ மாமன்றமும், யாழ்ப்பாண மாகாண அவையும் ஈழ மண்ணில் நடந்தது ஓர் இனப்படுகொலை என்று தீர்மானத்தைக் நிறைவேற்றின. செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்றி, ஓர் இனப்படுகொலையை நிறைவேற்றி, மானிட உரிமைகளை அழித்து, இரக்கமற்ற ஈனர்களாக வகுப்புவாத, பௌத்த, சிங்கள பேரினவாத அரக்கர்கள் பெரும்பான்மையினராகவும், ஆட்சியாளர்களாகவும் வலம் வருகின்றனர். இந்த அரக்கர்களை பாதுகாக்க இந்திய ஒன்றியமும் சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு உழைக்கின்றன. அடையாளமில்லாமல் அழிக்கப்பட்ட இனக்குழு, குரல் எழுப்பமுடியாமல் அமைதியாக அழிக்கப்பட்ட இனக்குழு. சிதறடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட இனக்குழு. பிரிவினைகளையும் வேற்றுமைகளையும் உருவாக்கி கொலைசெய்யப்பட்ட இனக்குழு.

10 உலக நாடுகளால் இரண்டு இலக்க தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்ட இனக்குழு. அழுவதற்கே தடைசெய்யப்பட்ட இனக்குழு. விடுதலையடைந்த நாடுகள் விடுதலையடையக் கூடாதென கூறப்பட்ட இனக்குழு. தஞ்சமடைய தடைசெய்யப்பட்ட இனக்குழு. விம்மி அழுத அழுகுரலை உலக நாடுகளால் கேட்க மறக்கப்பட்ட இனக்குழு. இந்த இனக்குழு எழுந்து நிற்கும் ஒரு நாள்.

உழைக்கும் உழைப்பாளிகள், ஈகம் தந்த ஈகிகள், உரிமைப் போராளிகள், ஈழ மண்மீது பற்றுள்ளவர்கள் உயிருள்ளவரைக்கும் ஈழத்தமிழர்கள் எழுந்து நிற்பார்கள். ஈழக்கண்ணில் இன்னும் ஈரம் காயவில்லை. ஈழக்குருதி இன்னும் வற்றவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலை நம்மை முடிப்பதற்கில்லை, முன்னின்று முயன்று முன்னேற விடுதலைப் பயணத்தில். சிதறிய உள்ளங்களை கூட்டிச்சேர்த்து, ஈழநாடு கிடைக்க இயக்கவந்த உந்து சக்தி. ஈழமண்ணைக் காக்க மலையாய் எழுந்து வர கிடைத்த விடுதலைவேள்வி. முள்ளிவாய்க்கால் நினைவு கண்ணீர் வடிக்க அல்ல. இயக்கமாக இணைந்து போராட தந்த தளம். வேற்றுமைகளை வேரறுத்து, வேண்டியது தமிழீழம் என்று முழங்க, கிடைத்த வாய்ப்பு. முள்ளிவாய்க்கால் நினைவு நம்மை முடக்கிவிடாமல் எழுந்து நின்று பேரினவாத அரசியலுக்கு பேரிடி தர வந்த வானமாகும்.

நாம் கீழ்கண்ட பணிகளை செய்யவேண்டும். ஒன்று. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளும் சிறிய நாடுகளோடும், அமைப்புகளோடும் சேர்ந்து, அடுத்த கட்டச் செயல்பாடுகளுக்கு வழிதேடவேண்டும்.

இரண்டு. ஐநா, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம், பன்னாட்டு குற்றவியல் நயன்மன்றம் போன்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளில் இனப்படுகொலைக்கான ஆவணங்களை பதிவுசெய்யவேண்டும்.

மூன்று. நமது குழந்தைகளுக்கு இனப்படுகொலையின் வரலாற்றை எடுத்துக் கூறி, விடுதலைக்கான, நயன்மைக்கான வழிகளை வகுக்கவேண்டும்.

நான்கு ஈழ விடுதலைக்காக உண்மையிலேயே உழைத்து வருகின்ற தமிழ் மக்கள் இயக்கங்களோடும், பிற இயக்கங்களோடும் இணைந்து செயல்படவேண்டும்.

ஐந்து. ஈழத்தமிழர்கள் தங்களை முதலில் நம்பவேண்டும். பிறர் நமக்கு விடுதலை அல்லது உரிமை வாங்கி தருவர் என்று நம்பாமல் ஒருங்கிணைந்த கூட்டுச்செயல்பாட்டை முன்னெடுக்கவேண்டும்.

ஆறு. அறிவுத்தளத்திலும், ஆராய்ச்சி தளத்திலும் இனப்படுகொலை குறித்து ஆய்வுசெய்து, திட்டமிட்டு பரப்பிடவேண்டும். கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

ஏழு. தனி தமிழீழம் என்ற ஒற்றை குறிகோளுடன் நமது பரப்புரையும், கலந்தாய்வும், விழிப்புணர்வும் அமையவேண்டும்.

இறுதியாக, வகுப்புவாதமும், பாசிசமும், பேரினவாதமும், நாசிசமும் வெற்றி பெறாதென வரலாறு நமக்கு எடுத்தியம்புகின்றது.  ஆனால் உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பீட்டையும், அழிவையும் ஏற்படுத்திவிட்டு செல்கின்றன. பேரினவாத அழிப்பிலிருந்து தப்பித்த நாம் இந்தப் பேரினவாதத்தை அழிக்க அயராது உழைக்கவேண்டும். பண்பாட்டு இனப்படுகொலை தொடர்வதற்கு உயிர்நாடியான பௌத்த பேரினவாதத்தை மதியால் வெல்வோம். தன்னல தேவைகளை நிறைவுசெய்ய உழைக்காமல் ஈழத்தாயின் இதய வேட்கையை இனிதே நிறைவேற்றுவோம். இது ஒரு சடங்கு அல்ல, சாதிக்க சரியான இடத்தில் உரத்த குரலில் ஊரறிய உரக்கச்சொல்ல உறுதி எடுக்கும் நேரமாகும். சாதி, சமய வேறுபாடுகளை புறம்தள்ளி தமிழீழம் ஒன்றே நமது தாய்நாடு என்று முழங்கி, வீறுகொண்டெழுந்து பயணிக்க விடும் அறைகூவலாகும். அந்த அறைகூவலுக்கு பொதுநலமுடன் செவிமடுத்து செயல்படுவோம். நாளை விடியல் நமது கண்முன்னே. மறக்காதீர்! மறையாதீர்.

Leave a Reply