இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்

506 Views

தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத

வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால்

பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி

சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே!

 

கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன்

தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி

தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க

அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே!

 

பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு

கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர்

பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம்

கொதித்தெழும்பத் தேசத்தைக் கைக்கெடுத்த வேந்தனெங்கே!

 

பாசமிகு உறவுகளே, தமிழீழத் தலைவர்களே

நன்றாகச் சிந்தியுங்கள் சிந்தித்துச் செயலெடுங்கள்

குருதியினில் நடைபயின்று நெருப்பாற்றை ஊடுருவி

பகைவர்தளம் தகர்த்தழித்து மண்மீட்டுக் காத்தவர்கள்

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் புதல்வியர்கள்

 

விண்ணுறையும் மாவீரர் கனவுகளை நாம் சுமப்போம்

சர்வதேச நாடுகளின் சதியால்நாம் அழிந்தாலும்

துவளாது நாமொன்றாய்த் தலைமகனின் உறுதியுடன்

சாத்வீகப் போர்தொடுத்து அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சந்ததியின் நலனுக்காய் எழுச்சிக்காய் சிந்தியுங்கள்

தலைவணங்காத் தமிழனவன் தமிழினத்தின் தெய்வமகன்

அஞ்சாத நெஞ்சனவன், அடக்கியாண்ட சிங்களத்து

இனவாத நெஞ்சத்துச் சண்டாளர் பாதகங்கள்

களைந்தெங்கள் இனம்காத்த வீரத்தை மறப்பீரோ

 

இராணுவத்தை வெளியேற்றி உறவுகளைக் குடியமர்த்தத்

தாமதிக்கும் காலமெல்லாம் இனமழியும் காலமன்றோ

தாயகத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்கையிலே

எங்கள்மண் முற்றாகக் கபளீகரம் செய்கையிலே

எதிர்த்தொருபோர் முன்னெடுக்கத் திரண்டெழுவீர் உறவுகளே

 

கர்ப்பத்துச் சிசுக்களொடு கருத்தரித்த பெண்களொடு

கைக்குழந்தை அன்னையரோ டிளைஞர்கள் யுவதிகள்

வளர்ந்தவர்கள் வயோதிபர்கள் வயதுவேறுபாடின்றி

முள்ளிவாய்க்கால் பலிக்களத்தில் குண்டுகளால் கொல்லப்பட்ட

கொடூரங்களுக் கோர்தீர்வு பெறுவதற்குத் திரண்டெழுவோம்

 

நீண்டகாலம் சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்களை

மாண்டழியும் முன்னதாக மீட்டெடுக்கும்; துணிச்சலுடன்

வீரம்மிக்க இளைஞர்களே, தலைவர்களே திரண்டெழுந்து

அகிம்சைவழிப் போராடி அடிமைவிலங் குடைத்தெறிவோம்

 

சுயநலத்தின் வேரறுத்து பிரிவினைக்கு இடங்கொடாது

ஒன்றுபட்டுக் கரமிணைத்து மனிதநேயம் வளர்த்தெடுத்து

மனோதிடத்தில் தளராது மாற்றான்பேச்சில் மயங்கிடாது

இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம்.

-மாரீசன்-

Leave a Reply