இனப்படுகொலை நடந்த மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை-சபா குகதாஸ்

குருந்தூர் மலையில் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை அழித்து, புத்தர் சிலை வைத்து வழிபாடுகளை நடத்துவதன் மூலம் மீண்டும்  முல்லை மண்ணில் கலாசார படுகொலையை அரசு அரங்கேற்றியுள்ளது.

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் குருந்தாவஷோக ரஜமஹா விகாரை அமைக்கப்பட்டு, நேற்று முதல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ்,

“2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதே மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை பிரதிபலித்த ஆதிசிவன் ஐய்யனார் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கையகப்படுத்தி இராணுவ இரும்புக்கரம் கொண்டு எந்தவிதமான ஐனநாயக, சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாது பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு புத்தரின் சிலையை வைத்து பௌத்த பிக்குகளினால் பிரித்து ஓதல் நடைபெறுதல் என்பது  மீண்டும் ஒரு கலாசார படுகொலையை முல்லை மண்ணில் அரங்கேற்றியுள்ளது.

தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே குருந்தூர் மலையில் மேற்கொண்ட ஆய்வில் இறுதியில் கண்டெடுக்கப்பட்டது சிவலிங்க வடிவிலான தொல் பொருள் என்பது உலகமே அறிந்த விடையம் அத்துடன் குருந்தமரம் என்பது இந்துக்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்று இதற்கு பல ஆதாரங்கள் உண்டு இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது இதுவும் தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப் படும் படுகொலையாகவே அமைந்துள்ளது.

கொரோன பெரும் தொற்று என பிரகடனப்படுத்தி இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்களை கோரும் அரச இயந்திரம் தாங்களே அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம் பெற்றுள்ளது. சட்டம் யாருக்கு என்ற கேள்வி  எழுந்துள்ளதுடன் எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.