இனப்படுகொலை ஊடாக நாம் வேண்டி நிற்பது ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வையே – பேராசிரியர் இராமு.மணிவண்ணன்

485 Views

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணனுடனான நேர்காணல்

கேள்வி: இலங்கை, தமிழினப் படுகொலை சொல்லும் செய்தி என்ன?

பதில் – தமிழீழத்தில் தமிழினத்திற்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலை, தமிழ் சமூகத்திற்கு ஒரு அரசியல் செய்தியையும், எதிர்கால சந்ததியினர் இதை மறக்கவே கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாக  தெளிவு படுத்துகின்றது. அதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் சிங்களப் பேரினவாதம், சிங்கள அரசு, சிங்கள இராணுவம் போன்றவற்றை உள்ளடக்கிய அரச பேரினவாதம் நடக்கும் சூழலில் இனப் படுகொலையின் ஊடாக நாம் தேடுவது ஒரு அரசியல் தீர்வையே. இந்த அரசியல் தீர்வு மட்டுமே தமிழ் மக்களுக்கு ஒரு வெளிச்சத்தையும், விடுதலையையும் வேண்டி நிற்கும்.

இலங்கையில் தமிழீழப் பகுதியில் நடந்தேறிய இனப் படுகொலை என்பது, இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு ஒரு அரசியல் வெளிச்சத்தையும் நமக்குத் தந்திருக்கின்றது. மிகப் பெரியதொரு விலையைக் கொடுத்துத் தான் இந்த அரசியல் வெளிச்சத்தை நாம் பெற்றிருக்கின்றோம். இதன் ஊடாக நாம் வேண்டுவது விடுதலை மட்டுமல்லாமல், நமக்குத் தேவையான இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு மட்டுமே.

இந்த அரசியல் தீர்வு, பன்னாடுகளின் தலையீட்டுடன், உலக நாடுகள் அனைத்தின் பார்வையின் ஊடே நமக்கு கிடைப்பதுடன், இவ்வளவு பெரிய அநீதிகளையும், போர்க் குற்றங்களையும், இனப் படுகொலைகளையும் நடத்திய இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நாம் வேண்டுவது தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வையே ஆகும்.

நமக்குத் தேவையான அரசியல் தீர்வு என்பது உலக நாடுகளால் நடத்தப்படுகின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா. மனித உரிமைகள் மன்றம், ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றவற்றின் ஊடாக நடத்த வேண்டிய ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் இருந்தாலும், தாய் நாட்டில் தமிழீழ மக்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வாக அமைய வேண்டும்.  அதை ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாக மேற்கொள்ளலாம். தற்போது அதற்கான சூழல் இருக்குமா? என்பது பற்றி காலம் தான் தீர்மானிக்கும். அதற்கான ஒரு அரசியலை உருவாக்க வேண்டியதுடன், அதற்கான ஒரு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது மிகப் பெரிய ஒரு பணியாகும்.

நடந்தேறிய இனப்படுகொலை ஊடாக அன்றும், இன்றும், என்றும் நினைவு படுத்துவது என்னவென்றால், நாம் வேண்டி நிற்பது ஒரு அரசியல் தீர்வையே ஆகும்.

 

 

 

 

Leave a Reply